புதுவை நகரம், கிராமங்களில் பேனர்கள் அகற்றும் பணி தீவிரம்

புதுச்சேரி, செப். 19:   புதுவையில்  நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளின் எச்சரிக்கையை தொடர்ந்து  நகரம், கிராமங்களில் ஆங்காங்கே அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்கள்  அனைத்தும் முழுவீச்சில் அகற்றப்பட்டு வருகின்றன.புதுவையில் பேனர்  தடைசட்டம் அமலில் உள்ளது. இருப்பினும் அனுமதியின்றி ஆங்காங்கே சாலைகளில்  பேனர்கள் வைக்கப்படுகின்றன. பிறந்தநாள் வாழ்த்து பேனர்கள், திருமண வாழ்த்து  பதாகைகள், அரசியல் தலைவர்களின் வருகை வரவேற்பு கட்அவுட்கள் ஆங்காங்கே  வைக்கப்படுகின்றன. முக்கிய சாலை, சந்திப்புகளில் அனுமதி பெறாமல்  வைக்கப்படும் விளம்பர பேனர்களால் அவ்வப்போது விபத்துகள் நடைபெறுகின்றன.  மேலும் சூறவாளி காற்றின்போது அவை சரிந்து மின் கம்பங்களில் விழுந்து  பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கின்றன.இருப்பினும் மாவட்ட நிர்வாகம்  இவ்விவகாரத்தில் உறுதியான நடவடிக்கையை மேற்கொள்ளாமல் அலட்சியம் காட்டி  வருகிறது. சமீAபத்தில் பேனர் வைப்பதில் இரு அரசியல் கட்சிகள் இடையே கோஷ்டி  பூசல் ஏற்பட்டு பிரச்னை நகராட்சி அலுவலகம் வரை சென்றது. கட்சிகள்  முற்றுகையில் ஈடுபடவே, அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றப்படும்  இல்லாவிடில் அதை வைத்தவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்படும் என்று  உறுதிமொழி அளிக்கப்பட்டது.இதனிடையே புதுச்சேரி நகரம்,  கிராமப்புறங்களில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த பேனர்கள், கட்அவுட்கள்  அனைத்தும் முழுவீச்சில் அகற்றப்பட்டு வருகின்றன. பெரும்பாலான இடங்களில்  பேனர்களை வைத்தவர்களே நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துக்களின் எச்சரிக்கையால்  அவற்றை அகற்றிச் சென்றனர். சில இடங்களில் அகற்றப்படாமல் இருந்த பேனர்களை  அதிகாரிகள், நகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.மாவட்ட நிர்வாகத்தின்  அனுமதி பெற்று அதற்கான நகல்களுடன் வைக்கப்படும் கட்அவுட், பேனர்களுக்கு  மட்டுேம ஏற்றுக் கொள்ளப்படும் என்று நகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  அவ்வாறு முறையான அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட அனைத்து பேனர்களும்  அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: