முட்டல் ஆனைவாரி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

ஆத்தூர், செப்.19:ஆத்தூர் அருகே முட்டலில் ஆனைவாரி நீர்வீழ்ச்சியில், தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே முட்டல் கிராமத்தில், வனத்துறைக்கு சொந்தமான வனப்பகுதி மற்றும் மலைப்பகுதியில் கல்வராயன் மலையில் உற்பத்தியாகும் காட்டாறு, ஆனைவாரி என்னும் இடத்தில் நீர்வீழ்ச்சியாக கொட்டுகிறது. இந்த இடத்தில் வனத்துறையின் சார்பில், பொதுமக்கள் பாதுகாப்புடன் குளிக்கும் வகையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பகுதியினை வனத்துறை சுற்றுலா தலமாக மாற்றி, அந்த பகுதியில் முட்டல் ஏரியில் படகு சவாரி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களையும்ஏற்படுத்தியுள்ளனர். மேலும், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், குடில்களையும் அமைத்து வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த மாதத்தில் மழை பொய்த்து போனதால், மலைப்பகுதியிலிருந்து தண்ணீர் வரத்தின்றி, நீர்வீழ்ச்சி வறண்ட நிலையில் இருந்தது. இதனால் பொதுமக்களின் வருகையும் குறைந்தது. கடந்த சில நாட்களாக கல்வராயன் மலைப்பகுதியில் அதிகளவு மழை பெய்தது. இதனையடுத்து, ஆனைவாரி நீர்வீழ்ச்சியில், தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்ட தொடங்கியுள்ளது. இதனால் நேற்று முன்தினம், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது.

Related Stories: