குவாரியை நடத்தவிடாமல் பணம் கேட்டு மிரட்டும் கும்பல் - கலெக்டர் அலுவலகத்தில் முறையீடு

சேலம், செப்.19: சேலம் அருகே குவாரிகளை நடத்த விடாமல், பணம் கேட்டு மிரட்டும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. இதில், காடையாம்பட்டியை அடுத்த பொம்மியம்பட்டி, சுண்டகாப்பட்டி, உப்பிலிக்கம்பட்டி மற்றும் குழந்தைநகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 120க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து மனு ஒன்றை அளித்தனர். இதுகுறித்து, முன்னாள் ஊராட்சி தலைவர்கள் ரங்கநாதன், முருகேசன் மற்றும் கவுன்சிலர் காளியப்பன் ஆகியோர் கூறுகையில், “பொம்மியம்பட்டியை சுற்றி 3 இடங்களில் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. அரசின் வழிகாட்டுதல்படி, பொதுமக்களுக்கும், சுற்றுப்புற சூழலுக்கும் எவ்வித பாதிப்பு ஏற்படாத வகையில் ஜல்லி, எம்.சாண்ட் ஆகியவை தயாரிக்கப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் அதேபகுதியை சேர்ந்த ஒரு கும்பல், கல்குவாரி நடத்துபவர்களை பணம் கேட்டு மிரட்டி வருகின்றனர். உரிமையாளர்கள் பணம் கொடுக்க மறுத்தால், கலெக்டர் அலுவலகத்தில் பொய்யான குற்றச்சாட்டுகளை தெரிவிக்கின்றனர். குவாரியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பணிபுரிந்து வருகின்றனர். குவாரி இயக்கத்திற்கு தடை ஏற்பட்டால், அனைவரும் வேலையிழந்து வாழ்வாதாரத்தை பறிக்கொடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவர். எனவே, பணம் கேட்டு மிரட்டும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றனர்.

Related Stories: