மாஜி கலெக்டரிடம் கோர்ட்டில் 3 மணி நேரம் குறுக்கு விசாரணை

சேலம், செப். 19: லஞ்சம் வாங்கிய தாசில்தார் மீது வழக்கு தொடர அனுமதி கொடுத்த விவகாரத்தில் சேலம் முன்னாள் கலெக்டரிடம் நீதிமன்றத்தில் 3 மணி நேரம் குறுக்கு விசாரணை நடந்தது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி தாசில்தாராக இருந்த சின்னுசாமி, கடந்த 2013ம் ஆண்டு ₹10ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு சேலம் லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு தொடர அப்போதைய கலெக்டர் சம்பத், அனுமதி வழங்கினார். தற்போது அவர், சென்னையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலவாரியத்தில் இயக்குனராக பணியாற்றி வருகிறார்.இந்த வழக்கில் கடந்த ஜூலை மாதம் 20ம்தேதி, மாஜி கலெக்டர் சம்பத் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது எதிர்தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்தவில்லை. நேற்று குறுக்கு விசாரணைக்கு சம்மன் மூலம் மாஜி கலெக்டர் சம்பத் அழைக்கப்பட்டார். நேற்று காலை 11 மணிக்கு நீதிபதி(பொறுப்பு) சிவஞானம் முன்னிலையில் ஆஜரானார். அவரிடம் 3 மணி நேரம் குறுக்கு விசாரணை நடந்தது. இதையடுத்து வழக்கு வரும் 29ம்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

Related Stories: