ஆட்டையாம்பட்டி அருகே கழிவுநீர் தேக்கத்தால் தொற்றுநோய் அபாயம்

ஆட்டையாம்பட்டி, செப்.19: ஆட்டையாம்பட்டி அருகே நைனாம்பட்டி பகுதியில் தேங்கி கிடக்கும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆட்டையாம்பட்டி அருகே ராஜாபாளையம் கிராம பஞ்சாயத்தில், நைனாம்பட்டியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆட்டையாம்பட்டி வழியாக சித்தேரி ஏரிக்கு செல்லும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் தனியாருக்கு சொந்தமான காலி நிலத்தில் ஆண்டுகணக்கில் கழிவுநீர் குட்டைபோல் தேங்கி பச்சை நிறத்தில் மாறியுள்ளது.

கழிவுநீர் தேங்கியுள்ள பகுதிக்கு அருகே அங்கன்வாடி மையம் மற்றும் கோயில் உள்ளதால் மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் குடியிருப்பு பகுதியில் அடிக்கடி புகுந்து விடுகிறது. இதனால் மக்கள் அச்சத்திற்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: ஆட்டையாம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் கூறியும் நடவடிக்கை இல்லை.  எனவே, இப்பகுதி மக்களின் நலன் கருதி தேங்கிய கழிவுநீரை அகற்றி, முறையான சாக்கடை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: