மேட்டூரில் சாலையோரத்தில் நிறுத்தப்படும் லாரிகளால் விபத்து அபாயம்

மேட்டூர், செப்.19: மேட்டூரில், சாலையோரத்தில் நிறுத்தப்படும் லாரிகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க போலீசார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூரில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள், பல பெரிய தொழிற்சாலைகள் உள்ளன. மேலும் பள்ளிகள், அரசு கல்லூரி, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, மேட்டூர் அனல் மின்நிலையம், ஒருங்கிணைந்த நீதிமன்றம், சார் ஆட்சியர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம் உள்ளிட்டவைகள் உள்ளது. மேலும் மேட்டூர் அணையை சுற்றிபார்க்க மற்றும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பஸ், லாரி மற்றும் இருச்சக்கர வாகனங்கள் என வந்து செல்கிறது. இதனால் சேலம்-மேட்டூர் சாலை எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படும். போக்குவரத்து மிகுந்த சாலையில் குஞ்சாண்டியூர் முதல் சேலம் எஸ்ஆர் வரை சாலையோரத்தின் இரு புறங்களில் லாரிகள் 24 மணி நேரமும் நிறுத்தப்படுகிறது. குறிப்பாக ராமன் நகர், புதுச்சாம்பள்ளி, கருமலைக்கூடல் ஆகிய பகுதிகளில் அதிகளவில் லாரிகள் நிறுத்தப்படுகிறது. இப்பகுதிகளில் லாரிகள் நிறுத்த கட்டணம் நிறுத்துமிடங்கள் உள்ளன. ஆனால் இங்கு லாரிகளை நிறுத்தாமல் உரிமையாளர்கள் சாலையோரத்திலேலேய நிறுத்துகின்றனர். மேலும், கருமலைக்கூடல் போலீஸ் ஸ்டேஷன் எதிரேர முக்கிய திருப்பங்களில் 16 லாரிகள் தினந்தோறும் நிறுத்தப்படுகிறது. இதனால் சேலத்திலிருந்து மேட்டூர் செல்லும் வாகனங்களும், மேட்டூரில் இருந்து சேலத்திற்கு வரும் வாகனங்களும் எதிர் எதிரே வரும் போது பாதை தெரியாமல் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

மேலும் அருகிலேயே வட்டார போக்குவரத்து அலுவலகம் இருந்தும் யாரும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகின்றனர். அதிகம் ராமன் நகரில் இருந்து இரட்டை புளியமரத்தூர் பாதையில் வாட்டர் சர்வீஸ் ஸ்டேஷன் உள்ளது. இதில் சர்வீஸ் செய்ய வரும் லாரிகளும் சாலையோரத்தில் தான் நிறுத்தப்படுகிறது. இதனால் மற்ற வாகனங்கள் இந்த வழியாக திரும்பும் போது மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. முக்கிய சாலை என்பதால் லாரிகளை அடிக்கடி திருப்புவதால் விபத்து அதிகளவில் நிகழ்கிறது. எனவே விபத்தை தடுக்க சேலம்-மேட்டுர் சாலையோரத்தில் நிறுத்தப்படும் லாரிகள் மீது போக்குவரத்து போலீசார் மற்றும் வட்டார அலுவலர்கள் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

அதே போல் மேட்டூர் அரசினர் ஐடிஐ பக்கம் சாம்பல் லாரிகள் நிறுத்தப்படுவதை முறைபடுத்த வேண்டும் என மாணவ,மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

Related Stories: