ஓய்வு பெறும் நாளிலேயே அரசு ஊழியர்கள் பணப்பலன்களை பெற வசதி

தென்காசி, செப். 19: தென்காசியில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க 4வது மாநில பிரதிநிதிகள் பேரவை கூட்டம் நடந்தது. மாநில தலைவர் சீதரன் தலைமை வகித்தார். வரவேற்பு குழு தலைவர் குமாரவேல் வரவேற்றார். பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வேலை அறிக்கை வாசித்தார். மாநில பொருளாளர் ஜெயச்சந்திரன் நிதிநிலை அறிக்கை வாசித்தார். கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மை செயலாளர் தென்காசி ஜவஹர் துவக்கி வைத்து பேசியதாவது: அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியர்கள் தங்களது பணி பதிவேட்டை ஆன்லைன் மூலமே சரிபார்த்து கொள்ளலாம். மேலும் இனி ஓய்வுபெறும் நாளிேலயே அனைத்து பணப்பலன்களையும் பெற்று கொள்ள வசதி ஏற்படுத்தப்படும். மாவட்ட தலைநகர் மட்டுமின்றி தாலுகா அளவிலான மருத்துவமனைகளிலும் இனி அரசு ஊழியர்கள் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து அரசு ஊழியர் சங்க பொதுச்செயலாளர் அன்பரசு பேசினார். மாநில செயலாளர்கள் முருகேசன், சந்திரசேகரன், பக்கிரிசாமி, ஜீவானந்தம், தங்கமணி, புருஷோத்தமன், ஆறுமுகம், துணை தலைவர்கள் சங்கரன், ஜோதி, சந்திரன், கணேசன், சுந்தரமூர்த்தி, இளமாறன், சுகுமாறன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் துரைசிங், மாவட்ட தலைவர் பார்த்தசாரதி, ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க மாநில துணை தலைவர் சண்முகசுந்தரம், மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் உட்பட 600க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர். வரவேற்புக்குழு செயலாளர் மாரியப்பன் நன்றி கூறினார்.

 கூட்டத்தில் மத்திய அரசைப்போல அனைவருக்கும் 9 ஆயிரம் மாத ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

21 மாத நிலுவைத்தொகை வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும், அங்கன்வாடி, சத்துணவு, ஊராட்சி செயலாளர்கள், வருவாய் கிராம ஊழியர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள 244 வட்டங்களிலும் நவ.13ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: