மணல் குவாரி அமைக்காததை கண்டித்து தொகுப்பு வீடு கட்டும் நகல் எரிப்பு போராட்டம்

சின்னசேலம், செப். 19: கச்சிராயபாளையம் கோமுகி அணையில் மாட்டு வண்டியில் மணல் அள்ளும் வகையில் குவாரி அமைக்காததை கண்டித்தும், பயனாளிகள் தொகுப்பு வீடு கட்ட மணல் அள்ள அதிகாரிகளே தடையாக இருப்பதை கண்டித்தும் தொகுப்பு வீடு கட்ட அரசு வழங்கிய உத்தரவு நகல் எரிப்பு போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் கச்சிராயபாளையத்தில், சின்னசேலம் வட்டார அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் கஜேந்திரன் தலைமை தாங்கினார். வட்டார நிர்வாகிகள் தங்கதுரை, ரங்கநாதன், முருகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைபொது செயலாளர் வெங்கடேசன், மாநில தலைவர் பாலசுந்தரம் சங்க வளர்ச்சி பற்றி சிறப்புரை ஆற்றினார்கள். கள்ளக்குறிச்சி கோட்டத்திற்கு உட்பட்ட கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்கள் மற்றும் வடக்கநந்தல், சங்கராபுரம் உள்ளிட்ட பேரூராட்சிகளில் தொகுப்பு வீடு, மோடி வீடு கட்ட அரசு உத்தரவு வழங்கியதன் அடிப்படையில் வீடு கட்டி

வருகின்றனர்.

அவ்வாறு அரசு உத்தரவு பெற்றவர்கள் மணல் அள்ள ஆற்றுக்கு செல்லும்போது காவல் துறையினரும், வருவாய்த்துறையினரும் தடையாக உள்ளனர். இதனால் வீடு கட்டும் பணி முடங்கி உள்ளது.  எனவே, வீடு கட்ட அரசு வழங்கிய உத்தரவு நகலை வரும் 25ம் தேதி கள்ளக்குறிச்சி ஆர்டிஓ அலுவலகம் முன் எரித்து போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கச்சிராயபாளையம் பஸ் நிலையத்தில் பொதுமக்கள், மாணவர்கள், வியாபார நிறுவனங்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த வேண்டும் என்றும், எட்டு வழிச்சாலை வேண்டாம் என்றும் ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து பெறுவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கல்வராயன்மலை மக்கள் வேலை கிடைக்காமல் வயிற்று பிழைப்பிற்காக சமூக விரோத செயலுக்கு தள்ளப்படுகின்றனர். எனவே, மலைமக்களின் நலன்கருதி விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும், மாயம்பாடி-வெள்ளிமலை வரை நிறுத்தி வைக்கப்பட்ட சாலைகளை உடனடியாக போட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: