ரபேல் போர் விமான ஒப்பந்த ஊழலை கண்டித்து தூத்துக்குடியில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி, செப்.19:மத்திய பாஜ அரசின் ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் நடைபெற்றுள்ள ஊழலை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி வி.வி.டி சிக்னல் சந்திப்பில் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வேல்துரை, சுடலையாண்டி, மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ், மாவட்ட தலைவர்கள் முரளீதரன்(மாநகர்), ஜெயக்குமார் (தெற்கு), சீனிவாசன் (வடக்கு) முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் பேசியதாவது, மத்தியிலுள்ள மோடி அரசு ஊழல் நிறைந்த அரசாகவே உள்ளது. மக்கள் மீது இந்த அரசுக்கு அக்கறை இல்லை. நாளுக்குநாள் விலைவாசி அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவதால் நடுத்தர, ஏழை எளிய மக்கள் பெரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் சில நாட்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100 ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ரபேல் போர் விமானம் வாங்கியதில் பெரிய ஊழல் நடந்துள்ளது. இந்த ஒப்பந்த விதிமுறைகள் தனிப்பட்ட சில நிறுவனங்கள் பயன்பெறும் நோக்கில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பாஜ அரசின் இந்த மெகா ஊழலை மக்களுக்கு தெரியப்படுத்தவே இந்த ஆர்ப்பாட்டம் மாவட்டம்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. பாஜ அரசின் ஊழல்களை மட்டுமல்ல, பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்தும் காங்கிரஸ் தொடர்ந்து போராடும் என்றார். மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ் பேசும்போது, மோடி அரசின் ரபேல் போர் விமானம் உள்ளிட்ட பல்வேறு ஊழல்களை மறைக்கவே பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது என்றார்.

Related Stories: