பழவேற்காட்டில் தூண்டில் வளைவு விவகாரம்: மீனவர்கள் போராட்டம் வாபஸ்: நிரந்தர முகத்துவாரம் அமைப்பதாக கலெக்டர் உறுதி

சென்னை: பழவேற்காடு பகுதியில் கோட்டகுப்பம், லைட்அவுஸ் குப்பம், பழவேற்காடு தாங்கல், பெரும்புலம், என நான்கு ஊராட்சிகளில் 46 மீனவ கிராமங்கள் உள்ளன. சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பழவேற்காடு ஏரி - கடல் இணையும் பகுதியில் நிரந்திர முகத்துவாரம் அமைக்க அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதன்படி, கடந்த ஆண்டு பழவேற்காட்டில் நிரந்திர முகத்துவாரம் அமைக்க 27 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனாலும் பணிகள் தொடங்கப்பட வில்லை. இதனால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முன்தினம் திரண்டு முகத்துவார கடற்கரை பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு மீன்வளத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து போராட்டக்காரர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

இந்நிலையில், நேற்று காலை பழவேற்காடு பஜார் பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அமர்ந்து போராட்டம் நடத்தினர். பின்னர், மதியம் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், மாவட்ட எஸ்பி. பொன்னி, எம்எல்ஏ சிறுனியம் பலராமன் ஆகியோர் சென்று மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உங்கள் தொழில் பாதிக்காத வகையில் நாளை (இன்று) 16 லட்சம் செலவில் முகத்துவார பணி தொடங்கப்படும். தொடர்ந்து வரும் ஜனவரி மாதம் நிரந்தரப் முகத்துவாரப் பணி மற்றும் தூண்டில் வளைவு பணிகள் தொடங்கப்படும் என வாக்குறுதி அளித்தனர். அதையேற்று மீனவர்கள் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்து, கலெக்டருக்கு நன்றி கூறி கலைந்து சென்றனர்.

Related Stories: