திருவொற்றியூரில் பூட்டிக்கிடந்த கம்பெனியில் மண் திருட்டு: 24 லாரிகள் பறிமுதல்

திருவொற்றியூர், : சென்னை திருவொற்றியூர் ஜீவன்லால் நகர் எதிரே செயல்பட்டு வந்த எலக்ட்ரிக்கல் பொருட்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனம் கடந்த 10 ஆண்டுக்கு முன் மூடப்பட்டது. இதையடுத்து, அப்பகுதி மக்களில் சிலர், மூடப்பட்ட நிறுவனத்தில் உள்ள பூமியில் இருந்து பொக்லைன் மூலம் மண்ணை தோண்டி எடுத்து லாரிகளில் நிரப்பி ஆற்று மணலுடன் கலப்படம் செய்து விற்று வந்துள்ளனர். இதுகுறித்து கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், கடந்த மாதம் இரவு திருவொற்றியூர் போலீசார் மூடப்பட்டுள்ள தனியார் கம்பெனி பகுதியில் மறைந்திருந்து கண்காணித்தனர். அப்போது அங்கு, மண் திருடிய 2 லாரிகளை மடக்கி பிடித்தனர். ஆனாலும் மண் திருட்டு தொடர்ந்து நடந்து வந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திருவொற்றியூர் இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசன் தலைமையில் போலீசார் தனியார் கம்பெனிக்குச் சென்று சோதனை நடத்தினர். அப்போது, அங்கு, மண் திருடி லாரியில் ஏற்றி வெளியே கொண்டு செல்வதற்காக நிறுத்தப்பட்டிருந்த 7 லாரிகளை பிடித்தனர்.

போலீசாரை பார்த்ததும் லாரி டிரைவர்கள் மற்றும் கிளீனர்கள் தப்பி ஓட முயற்சித்தனர். போலீசார் அவர்களை விரட்டி சென்று  லாரி டிரைவர்கள் மற்றும் கிளீனர்கள் 35 பேரை மடக்கிப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.  மேலும், மண் ஏற்றுவதற்காக வந்த 17 லாரி என மொத்தம் 24 லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட லாரிகளை ஆர்டிஓவிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: