உத்திரவாதம் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை அதிரை பகுதி ஏரி, குளங்களில் தண்ணீர் நிரப்ப வேண்டும்

தஞ்சை, செப். 18:  அதிகாரிகள் உத்தரவாதம் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அதிராம்பட்டினம் பகுதி ஏரி, குளங்களில் தண்ணீர் நிரப்ப விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தஞ்சையில் நடந்த குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர். தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் அண்ணாதுரை தலைமை வகித்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.  அதிராம்பட்டினம் கடைமடை பகுதி  விவசாயிகள், நீர்நிலை பாதுகாப்பு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அளித்த  மனு: அதிராம்பட்டினம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதி ஏரி, குளங்கள்  நீரின்றி வறண்டு காணப்படுகிறது. இப்பகுதியில் நிலத்தடி நீர் உப்புநீராக  உள்ளதால் அன்றாட குடிநீர் தேவைக்கு பயன்படுத்த முடியவில்லை. இந்நிலையில்  குடிநீர் தேவைக்காக அதிராம்பட்டினம் கடைமடை பகுதியில் ஏரி, குளங்களுக்கு  முறை வைக்காமல் தண்ணீர் திறந்துவிட வேண்டுமென பலமுறை குறைதீர் கூட்டத்தில்  புகார் மனு அளித்தும் இதுவரை தண்ணீர் திறக்கவில்லை.

Advertising
Advertising

 இதனால் கோரிக்கையை  நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி கிழக்கு கடற்கரை சாலையில்  மறியல் போராட்டம் அறிவித்திருந்தோம். இதையடுத்து ஆகஸ்ட் 21ம் தேதி  பட்டுக்கோட்டை ஆர்டிஓ தலைமையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள்,  அதிராம்பட்டினம் இன்ஸ்பெக்டர் முன்னிலையில் அதிராம்பட்டினம் கடைமடை  விவசாயிகள், நீர்நிலை பாதுகாப்பு ஆர்வலர்கள், மீனவர்கள், ஜமாத்தார்கள்,  கிராம பஞ்சாயத்தார்கள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றோம். இதில் முதல்கட்டமாக  5 குளங்களை 20 நாட்களுக்குள் நிரப்பி தருவதற்கு ஆர்டிஓ மற்றும் அதிகாரிகள்  கையொப்பமிட்டு எழுத்துப்பூர்வமாக உத்திரவாதம் அளித்தனர். ஆனால் இதுவரை  அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் அளித்த காலக்கெடுவும்  முடிந்துவிட்டது. எனவே  இப்பிரச்னையில் உடனடியாக தலையிட்டு அதிராம்பட்டினம்  பகுதி ஏரி, குளங்களை நிரப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூதலூர் இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் கோரிக்கை மனு அளித்தார். அதில் கடந்த 3 ஆண்டுகளாக பருவமழை பொய்த்து விட்டதால் ஆச்சாம்பட்டி  உட்பட செங்கிப்பட்டி சுற்றுவட்டார கிராமங்களில் கடும் வறட்சி ஏற்பட்டு நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டது. குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் சூழ்நிலையில் நடப்பாண்டு அக்னியாறு வடிநில கோட்டம் பட்டுக்கோட்டை மூலம் ஏரிகள் தூர்வார டெண்டர் விடப்பட்டு பல மாதங்களாகியும் வேலை துவங்கவில்லை.  தற்போது பருவமழை துவங்கவுள்ளதால் உடனடியாக ஆச்சாம்பட்டியில் உள்ள ஆச்சான் ஏரியை தூர்வார வேண்டும். வன்னியம்பட்டி பருஜான் ஏரியை தூர்வாராமல் தூர்வாரிவிட்டதாக கூறி பில் பெறப்பட்டு விட்டதாக தெரியவந்துள்ளது.

எனவே உரிய விசாரணை நடத்தி தூர்வாராத வன்னியம்பட்டி பருஜான் ஏரியை தூர்வார உத்தரவிட வேண்டும். கட்டளை கால்வாய், உய்யகொண்டான் பாசன பகுதிகளில் விவசாயம் பொய்த்துவிட்டது. நடப்பாண்டு விவசாயத்துக்கு 2 வாய்க்கால்களிலும் நீர் குறைக்காமல், முறை வைக்காமல் தொடர்ந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும். மேலும் விவசாய பணிகளை மேற்கொள்ள விவசாயிகளுக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி அரசுடமையாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்க வேண்டும். விதை, உரம் போன்ற விவசாய இடுபொருட்களை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: