தா.பேட்டை ரேஷன்கடைகளில் விற்பனையாளர்கள் பற்றாக்குறை

தா.பேட்டை, செப்.18:  தா.பேட்டையில் ரேஷன்கடைகளில் விற்பனையாளர்கள் பற்றாக்குறையால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். தா.பேட்டை தொடக்கவேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு உட்பட்ட பகுதிகளான  தா.பேட்டை, பிள்ளாதுரை, வடமலைப்பட்டி, என்.கருப்பம்பட்டி, செவந்தாம்பட்டி,  ஆராய்ச்சி, தேவானூர் உள்ளிட்ட இடங்களில் 7 முழுநேர ரேஷன் கடைகளும்,  பகுதிநேர கடைகள் ஐந்தும் சேர்த்து மொத்தம் 12 கடைகள் உள்ளது. இந்த கடைகளில்  அந்தந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அரிசி  மண்ணெண்ணெய், பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்களை வாங்குகின்றனர். தற்போது  ரேஷன் கடைகளுக்கு விற்பனையாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. அதேசமயம்  விநியோகத்திற்கு தேவையான பொருட்களும் முழுமையாக கிடைக்கபெறுவதில்லை.  இதுகுறித்து தா.பேட்டையைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பவர் கூறும்போது, தா.பேட்டை  பகுதியில் இயங்கும் ரேஷன்கடைகளுக்கு விற்பனையாளர்கள் போதிய அளவில் இல்லை.  12 விற்பனையாளர்கள் வேலை செய்யவேண்டிய இடத்தில் 4பேர் மட்டுமே வேலை  செய்கின்றனர். இதனால் முழுநேரமாக இயங்கவேண்டிய ரேஷன்கடைகள் பகுதிநேரமாக இயங்கி வருகிறது. குறிப்பாக முழுநேர கடைகள் வாரத்திற்கு  இரண்டு அல்லது மூன்று நாட்கள்  மட்டும் செயல்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.  தினசரி திறக்க வேண்டிய ரேஷன்கடை  எப்போதாவது திறக்கப்படுவதால் கூட்ட நெரிசலும், தகராறும் ஏற்படுகிறது. இதுதவிர கடைகளுக்கு மண்ணெண்ணெய் 40 சதவிகிதமும், அரிசி 90  சதவிகிதமும், பாமாயில் 70 சதவிகிதமும், கோதுமை 20 சதவிகிதம் மட்டுமே  வருவதாக தெரிகிறது. இதனால் குடும்ப அட்டைதாரர்கள் பொருட்களை முழுமையாக  பெறமுடியாத நிலை ஏற்படுகிறது.

எனவே அனைத்து ரேஷன்கடைகளுக்கும்  விற்பனையாளர்களை நியமிப்பதுடன் ரேஷன்கடைகளுக்கு தேவையான அளவு  குடிமைப்பொருட்களை முழுமையாக வழங்க வேண்டும் என்று கூறினார்.

Related Stories: