பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர்கள் திருச்சியில் காத்திருப்பு போராட்டம்

திருச்சி, செப்.18: பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாத ஊதியம் தாமதமாக வழங்கப்படுவதை கண்டித்து திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் 40க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் 7ம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை உத்தரவாதப்படுத்த வேண்டும் என பிஎஸ்என்எல் கார்ப்பரேட் அலுவலகம், அனைத்து தலைமை பொது மேலாளர்களுக்கும் கடிதங்களை அனுப்பியும் இதுவரை நடவடிக்கை இலலை. இதனால் கால தாமதமாக வந்த ஊதியம் கடந்த சில மாதங்களாக வராமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஜூலை மாதத்திற்கான ஊதியம் வழங்கவில்லை. கடலூர் மாவட்டம் தவிர வேறு எந்த மாவட்டத்திலும் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. மூன்று மாத ஊதியம் நிலுவையில் உள்ள நிலையில் தொடர்ந்து வேலை செய்து வரும் ஒப்பந்த தொழிலாளர்கள் இதுதொடர்பாக பிஎஸ்என்எல்இஎப் உள்ளிட்ட மாநில சங்கங்களின் சார்பாக கடந்த 10ம் தேதி அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்தியும் நடவடிக்கை இல்லை.இதனைக் கண்டித்து தமிழ் மாநில பிஎஸ்என்எல்இஎப் உள்ளிட்ட மாநில சங்கங்கள் சார்பில் செப்டம்பர் 17ம் தேதி முதல் ஊதியம் வராத மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட பொது மேலாளர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி அந்தந்த மாவட்டங்களில் நேற்று போராட்டம் நடத்தினர். திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்றுமுதல் காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுந்தர்ராஜன் தலைமையில், என்எப்டிஇ மாநில துணை தலைவர் ஆறுமுகம் முன்னிலையில் ஆண், பெண் தொழிலாளர்கள் 40க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Related Stories: