சமயபுரத்தில் களைகட்டும் சூதாட்டம்

மண்ணச்சநல்லூர், செப்.18: சமயபுரம் பகுதியில் காசு வைத்து சூதாட்டம் ஆடும் சம்பவங்கள் பல இடங்களில் நடந்து வருகிறது. சம்பாதிக்கும் பணத்தை சூதாட்டத்தில் இழக்கும் ஆண்களால் குடும்ப பெண்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருவதால் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்.

தமிழகத்தில் உள்ள சக்தி வழிபாட்டு தலங்களில் முதன்மையாக கருதப்படுவது சமயபுரம் மாரியம்மன் கோயில். இந்த கோயிலுக்கு தமிழகத்தின் பல இடங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குறிப்பாக பெண் பக்தர்கள் வருவார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த சமயபுரத்தில் தற்போது சூதாட்டம் களைகட்டியுள்ளது. சமயபுரத்தில் உள்ள அண்ணாநகர் சுடுகாடு, மருதூர் ரோடு, தனியார் இன்ஜினியரிங் கல்லூரி பின்புறம், பங்களாதெரு உள்ளிட்ட பல இடங்களில் இரவு பகல் எந்நேரமும் காசு வைத்து சீட்டாட்டம் நடைபெறுகிறது. இதனால் பல ஆண்கள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை மதுவிலும், சீட்டாட்டத்திலும் இழந்து வெறும் கையுடன் வீட்டிற்கு செல்கிறார்கள். இதனால் பெண்கள் குடும்பத்தை காப்பாற்ற முடியாமல் திணறி வருகின்றனர். கையில் பணம் இல்லாதபோது அவர்கள் வீட்டில் குடும்பச் செலவிற்கு வைத்துள்ள பணத்தை எடுத்து சூதாட்டத்தில் இழந்துவிடுகின்றனர்.

மேலும் வீட்டில் பணம் இல்லாவிட்டால் மனைவி மற்றும் தாயின் காது, கழுத்தில் உள்ள தங்கநகைகளை அடகு வைத்தோ அல்லது விற்றோகூட சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. ஒருசில ஆண்கள் மனைவியின் கழுத்தில் உள்ள தாலிச்செயினை வலுக்கட்டாயமாக பறித்துக்கொண்டு கூட சென்று அதை அடகு வைத்து சூதாட்டத்தில் இழப்பதும் வாடிக்கையாகி வருகிறது. இதுகுறித்து போலீசாருக்கும் அவ்வப்போது புகார்கள் சென்றவண்ணம் உள்ளது.

நேற்றும் அதுபோல சமயபுரம் போலீஸ் நிலையத்திற்கு ஒரு புகார் சென்றது. சமயபுரம் புதுத்தெரு பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவரின் மருமகன் கருப்பையா  ராஜேஸ்வரியின் 3 பவுன் தங்கச் சங்கிலியை வீட்டில் இருந்துயாருக்கும் தெரியாமல் எடுத்துச் சென்று ஒரு அடகு கடையில் அடகு வைத்து தனது நண்பர்களுடன் சேர்ந்து குடித்து சூதாடி பணத்தை வீணடித்துவிட்டதாகவும், அதை மீட்டுத்தரும்படியும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகார் மீது போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: