பள்ளபட்டியை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும் : குறைதீர் கூட்டத்தில் குமுறலுடன் மனு

திண்டுக்கல், செப். 18: பள்ளப்பட்டி நல்லதண்ணிகேணி தெருவை மாநகராட்சியுடன் இணைத்து அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.திண்டுக்கல் அடுத்த பள்ளபட்டி பஞ்சாயத்து நல்லதண்ணிகேணி தெருவில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களின் குடிநீர் தேவைக்காக பஞ்சாயத்தில் இருந்து குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. ஆனால் குழாய்களில் 20 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வருகிறது.

இதனால் பலரும் டிராக்டர், லாரிகளில் வரும் நீரையே வாங்கி பயன்படுத்துகின்றனர். குடிப்பதற்கு சுத்திகரிக்கப்பட்ட நீரை வாங்கி வருகின்றனர். இதுகுறித்து பஞ்சாயத்து நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் பலனில்லை. இதனால் கொதிப்படைந்த இப்பகுதி மக்கள் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்குத் திரண்டு வந்து குறைதீர் கூட்டத்தில் மனு கொடுத்தனர். பின்னர் அவர்கள் கூறுகையில், ‘‘சாக்கடையை தூர்வாருவதே இல்லை. ஆழ்குழாயும் இல்லை. தெருவிளக்கும் எரிவதில்லை. கழிவுநீர் தேங்குவதால் சுகாதார பாதிப்பு ஏற்படுகிறது. எங்கள் பகுதியில் எந்த வசதியும் இல்லாததால் மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும். இதன் மூலமாவது எங்களின் அடிப்படை பிரச்னை தீரும் என்று நினைக்கிறோம் என்றனர்.

Related Stories: