ஆட்டோக்களில் அதிக கட்டணத்தை தடுக்க புகார் அட்டை

புதுச்சேரி, செப். 18:  புதுச்சேரியில் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து போக்குவரத்து துறையில் புகார் அளிப்பதற்கு ஏதுவாக குறை தெரிவிக்கும் அட்டையை கவர்னர் கிரண்பேடி நேற்று வெளியிட்டார். இதன் மூலம் அதிக கட்டணம் வசூலித்து வந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கடிவாளம் போடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் ஆட்டோக்களில் தாறுமாறாக கட்டணம் வசூலிப்பதாக பல்வேறு தரப்பினரும் அரசுக்கு புகார் தெரிவித்தனர். இதையடுத்து, ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி, குறைபட்ச கட்டணமாக 1.8 கி.மீ. ரூ.35ம், கூடுதலாக ஒவ்வொரு கி.மீ. 18ம், காத்திருப்பு கட்டணமாக ஒவ்வொரு 5 நிமிடத்துக்கு ரூ.5ம் கட்டணமாக வசூலித்து கொள்ளலாம். இரவு 10 மணிக்கு மேல் காலை 5 மணி வரை 50 சதவீதம் கூடுதலாக கட்டணம் வசூலிக்கலாம் எனவும்,  இந்த புதிய கட்டணத்தை மீட்டரில் திருத்தி கொள்ள வேண்டும் எனவும் கடந்தாண்டு போக்குவரத்துத்துறை உத்தரவிட்டிருந்தது. ஆனால், ஆட்டோ ஒட்டுநர்கள் வழக்கம்போல் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்து வந்தனர்.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் தரப்பிலிருந்து கவர்னர் கிரண்பேடிக்கு நிறைய புகார் சென்றது. இதையடுத்து, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்கள் மீது பொதுமக்கள் புகார் தெரிவிக்கும் அட்டை ஒன்றை தயாரித்து வழங்க உத்தரவிட்டார்.

அதன்படி, புதுச்சேரி போக்குவரத்து துறை சார்பில் ஆட்டோ பயணிகள் குறை தெரிவிக்கும் அட்டை தயாரிக்கப்பட்டது. இதனை கவர்னர் கிரண்பேடி நேற்று வெளியிட்டார். அப்போது, போக்குவரத்து துறை ஆணையர் சிவக்குமார் உடனிருந்தார். இந்த புகார் அட்டையின் பின்புறத்தில், ஆட்டோ பதிவு எண், சம்பவம் நடந்த நேரம், தேதி, புறப்படும் இடம் மற்றும் இறங்கும் இடம், பயணியின் பெயர், அவரது கைப்பேசி எண் உள்ளிட்டவை விவரங்கள் பூர்த்தி செய்யும் வகையில் அச்சிடப்பட்டுள்ளது. மேலும் புகாரின் தன்மை என்ற பிரிவில் மீட்டர் போட மறுப்பு / மீட்டர் வேலை செய்யவில்லை, அதிகப்படியான கட்டணம், சவாரிக்கு மறுத்தல், ஒழுங்கீனம் ஆகிய 4 கேள்விகள் இடம் பெற்றுள்ளது. அதில் பொதுமக்கள் `டிக்’ செய்ய வேண்டும். இதுதவிர, ஆட்டோ கட்டணம் குறித்த விவரம், காவல் கட்டுப்பாட்டு அறை எண், போக்குவரத்து கட்டணமில்லா தொலைபேசி எண், இ-மெயில் முகவரி உள்ளிட்டவையும் இடம் பெற்றுள்ளன. புகார் அட்டையின் முன்புறத்தில் போக்குவரத்து ஆணையர், போக்குவரத்து துறை, 100 அடி ரோடு, முதலியார்பேட்டை, புதுச்சேரி என்ற முகவரி இடம் பெற்றுள்ளது. மேலும், சாலை விதிகள் தொடர்பாக விழிப்புணர்வு வாசகங்களும் அச்சிடப்பட்டுள்ளது.

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்கள் குறித்த விவரங்களை இந்த அட்டையில் குறிப்பிட்டு தபால் மூலம் போக்குவரத்துத்துறைக்கு அனுப்பலாம். அதன் பேரில் போக்குவரத்துத்துறை சம்பந்தப்பட்ட ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள்.

 இதுகுறித்து கவர்னர் கிரண்பேடி வாட்ஸ் அப்பில் கூறியிருப்பதாவது: ஆட்டோ பயணிகள் குறைதீர் அட்டை வெளியிடப்பட்டுள்ளது. இது ஆட்டோவில் பயணம் செய்வதற்கு முன் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும். இது போக்குவரத்து துறை, போக்குவரத்து போலீசாரின் ஆதரவுடன் செயல்படுத்தும். இதன் மூலம் பயணிகள் அளிக்கும் அனைத்து புகார்களையும் போக்குவரத்து துறை பெற வேண்டும். அனைத்து புகார்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். யார் மீது திரும்ப திரும்ப புகார் வருகின்றது என்பதை கண்டறிய தரவு வங்கி தயாரிக்க வேண்டும். போக்குவரத்து துறை ஆணையர் புகார்கள் தொடர்பாக ஆட்டோ  உரிமையாளர் மற்றும் ஓட்டுனரை அழைத்து விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மூன்று முறை தவறு செய்யும் ஓட்டுனர்களின் உரிமத்தை தற்காலிகமாக நிறுத்த வேண்டும். இதுகுறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, சட்டப்படி நடந்து கொள்ளச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: