கிராமத்தில் மருத்துவ குழுவினர் முகாம் வயிற்றுப்போக்கால் 15 பேர் மருத்துவமனையில் அனுமதி: திருப்பத்தூர் அருகே குடிநீரில் கழிவுநீர் கலப்பு

திருப்பத்தூர், செப்.18: திருப்பத்தூர் அருகே குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்ததால் அதனை குடித்த 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அந்த கிராமத்தில் மருத்துவ குழுவினர் முகாமிட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த அரவமட்றப்பள்ளி அண்ணாமலை வட்டம் என்ற பகுதியில் 280க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில், குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் வழக்கம்போல் குடிநீர் விநியோகிக்கப்பட்டது. இதில் கழிவுநீர் கலந்து வந்ததாம். இதனை அறியாமல் குடித்த அப்பகுதி மக்களுக்கு திடீரென வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. சிலர் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர்.

இரவு மேலும் 15க்கும் மேற்பட்டோருக்கு திடீரென வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. அவர்களை அப்பகுதி மக்கள் குனிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். இதில், லட்சுமி(55), சந்திரமதி(41), முனியம்மாள்(55), பெருமாள்(25), ரோஜா(21) உட்பட 9 பேர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்த குனிச்சி வட்டார மருத்துவ அலுவலர் தீபா தலைமையிலான குழுவினரும், நடமாடும் மருத்துவ குழுவினரும் கிராமத்தில் முகாமிட்டு வீடு, வீடாக சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மருத்துவ குழு கூறுகையில், ‘விநாயகர் சதுர்த்தியையொட்டி நேற்று முன்தினம் அங்கு வைக்கப்பட்டிருந்த சிலைகளுக்கு பூஜைகள் செய்து சுண்டல் பிரசாதம் வழங்கியுள்ளனர். இதனை சாப்பிட்டதால் பலருக்கு புட் பாய்சன் ஏற்பட்டிருக்கலாம்’ என்றனர். ஆனால் பொதுமக்கள் கூறுகையில், ‘300 பேருக்கு மேல் பிரசாதம் வாங்கி சாப்பிட்டனர். அவர்களுக்கு எதுவும் ஆகவில்லை. கடந்த 4 நாட்களாகவே வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்பட்டு ஒரு சிலர் தனியார் மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது அதிகமாகி விட்டதால் அனைவருக்கும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது என்றனர்.

Related Stories: