குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டரிடம் மனு காட்பாடி ரயில் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுவதற்கு அனுமதி

வேலூர், செப்.18: ப்ரீபெய்டு ஆட்டோ சேவை தொடங்கியதால் ரத்து செய்து விட்டனர். மீண்டும் காட்பாடி ரயில் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் டிரைவர்கள் கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர். வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் ராமன் தலைமையில் நேற்று நடந்தது. டிஆர்ஓ பார்த்தீபன் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர். காகிதப்பட்டரையை சேர்ந்த இருதரப்பினர் தனித்தனியாக வந்து கலெக்டரிடம் புகார் அளித்தனர். அந்த மனுவில், ‘எங்கள் பகுதியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் நடந்த மோதல் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தனர்.

வேலூர் ஊராட்சி ஒன்றிய குடிநீர், மேல்நீர் தேக்க தொட்டி பம்ப் ஆபரேட்டர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் சங்கத்தினர் அளித்த மனுவில், ‘வேலூர் பிளாக்கில் 17 ஊராட்சிகளில் 100க்கும் மேற்பட்ட பம்ப் ஆபரேட்டர்கள், துப்புரவு பணியாளர்கள் பணிபுரிகிறோம். கடந்த ஏப்ரல் மாதம் வெளியான உத்தரவின்படி எங்களுக்கு ஊதிய உயர்வு வழங்கவில்லை. எனவே, ஊதிய உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என தெரிவித்திருந்தனர். மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காட்பாடியை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் கொடுத்த புகார் மனுவில், ‘காட்பாடி ரயில் நிலையத்தில் 84 பேர் 6 மாதத்திற்கு ஒருமுறை ₹2,124 செலுத்தி பாஸ் பெற்று ரயில் நிலையத்தின் உள்ளே சென்று ஆட்டோ ஓட்டி வந்தோம். ஆனால் ப்ரீபெய்டு ஆட்டோ சேவை தொடங்கியதால் இந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், ப்ரீபெய்டு ஆட்டோ சேவையும் செயல்படுத்தாமல் முடங்கியுள்ளது. இதனால் ரயில் நிலையத்தில் ஆட்டோ ஓட்ட முடியாமல் 84 குடும்பத்தினரும் பரிதவிக்கிறோம். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என தெரிவித்துள்ளனர்.

குடியாத்தம் அடுத்த சுண்ணாம்புபேட்டை பரசுராம் ெதருவை சேர்ந்த மாற்றுத்திறனாளி சுமதி(26) என்பவர் தனது தாய் அஞ்சலாவுடன் வந்து அளித்த மனுவில், ‘நான் பிளஸ் 2 வரை படித்துள்ளேன். எனக்கு பிறவிலேயே பார்வை கிடையாது. சிறு வயதிலேயே தந்தை இறந்துவிட்டதால், வறுமையில் தவிக்கிறேன். எனது தாய் பீடி தொழிலாளி.

எங்களுக்கு போதிய வாழ்வாதாரம் இல்லாததால் கஷ்டப்படுகிறோம். எனக்கு வேலை வழங்க வேண்டும்’ என கூறியிருந்தார். இதேபோல் ஓய்வூதியம், உதவித்தொகை உள்ளிட்டவை தொடர்பாக, ஏராளமான மனுக்களை பொதுமக்கள் வழங்கினர்.

Related Stories: