‘பெட்ரோல், டீசல் உயர்வை கண்டித்து விரைவில் ஸ்டிரைக்’

ராயபுரம்: வடசென்னை கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கம் பொதுக்குழு கூட்டம், ராயபுரம் மேற்கு மாதா கோயில் தெருவில் உள்ள சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது. சங்க தலைவர் பெருமாள் தலைமை வகித்தார். செயலாளர் ராஜா, பொருளாளர் மனோகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அனைத்து லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுகுமார் கலந்து கொண்டார்.

கூட்டத்தில், கடந்த ஜூன் மாதம் நாடு முழுவதும் சுங்க கட்டணம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, 3வது நபர் காப்பீடு ஆகியவற்றை கண்டித்து லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசு, 3 பேர் கொண்ட குழு அமைத்து, வேலை நிறுத்த பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என தெரிவித்தது. ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 16 நாட்களில் டீசல் விலை ₹2.60 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இதே நிலை நீடித்தால், பெட்ரேல் விலை லிட்டருக்கு ₹100க்கும், டீசல் ₹90க்கும் விற்பனை செய்யப்படும். பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரவேண்டும் என பலமுறை மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தும், இதுவரை நடவடிக்கை இல்லை.

உடனடியாக பெட்ரோல், டீசல் விலையை குறைக்காவிட்டால், கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம். எங்களுக்கு வாடகை தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: