ஏரியில் பதுக்கி வைக்கப்பட்ட 2 ஐம்பொன் சிலைகள் மீட்பு

சென்னை: செங்கல்பட்டு அருகே ஏரியில் பதுக்கி வைக்கப்பட்ட 2 ஐம்பொன் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதை பதுக்கிய கடத்தல் கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு அடுத்த ஆப்பூர் கிராமத்தை சேர்ந்த சங்கர் என்பவர், நேற்று காலை அங்குள்ள ஏரியில் தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது, அவர் வீசிய தூண்டிலின் முள் நீரினுள் பாசியில் சிக்கிக்கொண்டு வெளிேய வரவில்லை. நீண்ட நேரம் போராடியும் தூண்டில் முள் வெளியே வராததால், ஏரிக்குள் இறங்கினார். அப்போது, தூண்டிலின் முள், லாரி டயர்களுக்கு பயன்படுத்தப்படும் டியூப்பில் சிக்கியது தெரிந்தது. அதை எடுக்க முயன்றபோது, அந்த டியூப் உள்ளே ஏதோ பொருட்களை வைத்து கட்டி வைத்திருப்பது தெரியவந்தது. சந்தேகமடைந்த அவர், அந்த டியூப் மூட்டையை வெளியே கொண்டு வந்து, பிரித்து பார்த்தார். அதில், 2 அடி உயரம் கொண்ட 2 ஐம்பொன் அம்மன் சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள் இருப்பது தெரிந்தது.

தகவலறிந்து கிராம மக்கள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், இதுகுறித்து பாலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி, செங்கல்பட்டு டிஎஸ்பி கந்தன், பாலூர் இன்ஸ்பெக்டர் சக்திவேல், வருவாய் ஆய்வாளர் சவீதா, விஏஓ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து, சிலைகளை பார்வையிட்டனர். இதனிடையே, இந்த சிலைகள் அங்குள்ள நூற்றாண்டு பழமைவாய்ந்த கல்யாண பெருமாள் கோயிலுக்கு சொந்தமானதாக இருக்கலாம், என கருதிய கிராம மக்கள், அங்கு சென்று பார்த்தபோது, கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 2 அம்மன் சிலைகள் மாயமானது தெரியவந்தது.

முதற்கட்ட விசாரணையில், பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி கிடக்கும் கல்யாண பெருமாள் கோயிலில் ஐம்பொன் சிலைகள் இருப்பதை நோட்டமிட்ட கொள்ளை கும்பல், சிலைகளை திருடி, ஏரியில் பதுக்கி வைத்தது தெரியவந்தது. இந்த சிலைகளை அவர்கள் வெளிநாட்டுக்கு கடத்த திட்டமிட்டு இருக்கலாம், என போலீசார் தெரிவித்தனர். இந்த கொள்ளை கும்பல் யார், இதற்கு பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே, வருவாய் துறை அதிகாரிகள் சிலைகளை மீட்டு இந்து அறநிலையத் துறையிடம் ஒப்படைத்தனர். மேலும், பாதுகாப்பின்மை கருதி, அந்த கோயிலில் இருந்த மேலும் சில பூஜை பொருட்களும் அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன. ஏரியில் சாமி சிலைகள் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: