சென்னை ஏர்போர்ட்டில் ரூ.36 லட்சம் தங்கம் பறிமுதல் : இலங்கை வாலிபர்கள் உள்பட 4 பேர் கைது

மீனம்பாக்கம்: மீனம்பாக்கம் சர்வதேச விமானநிலையத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை 4 விமானங்களில் கடத்தி வரப்பட்ட ₹36 லட்சம் தங்க கட்டிகள் மற்றும் 6 லட்சம் மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக, இலங்கை வாலிபர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்படனர். கோலாலம்பூரில் இருந்து பார்டியாக் ஏர் விமானம் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு சென்னை வந்தது. அதில் வந்த சென்னையை சேர்ந்த நரேந்திரன் (42) என்பவரின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவர் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்தபோது, உள்ளறையில் ஒரு தங்க சங்கிலி மற்றும் 4 தங்க கட்டிகள் இருந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து 320 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ₹10 லட்சம். இதையடுத்து அவரை கைது செய்தனர்.

இதையடுத்து, சிங்கப்பூரில் இருந்து அதிகாலை 1.30 மணியளவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சென்னை வந்தது. அதில் வந்த சென்னையை சேர்ந்த அப்துல்லா (36) என்பவரின் சூட்கேஸை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதன் கைப்பிடியின் உள்ளறைக்குள் ₹6 லட்சம் மதிப்புள்ள 200 கிராம் தங்க கட்டிகள் மற்றும் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்து வந்த ₹6 லட்சம் மதிப்புள்ள மின்னணு சாதனங்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து தங்கத்தையும், மின்னணு சாதனத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரையும் கைது செய்தனர்.கொழும்பில் இருந்து நேற்று அதிகாலை 2.30 மணியளவில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை வந்தது. அதில் வந்த இலங்கையை சேர்ந்த ராஜரத்தினம் (34) என்பவரை, தனியறைக்கு கொண்டு சென்று, அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அவரது ஆசனவாயில் மறைத்து கடத்தி வரப்பட்ட ₹9 லட்சம் மதிப்புள்ள 300 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

அதேபோல், காலை 6 மணியளவில் கொழும்பில் இருந்து விமானத்தில் வந்த இலங்கையை சேர்ந்த நித்தியானந்தம் (37) என்பவரும் ஆசனவாயில் ₹11 லட்சம் மதிப்புள்ள 365 கிராம்  தங்கத்தை கடத்தி வந்தார். அதை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

Related Stories: