காங்கயத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு

காங்கயம், செப். 12:  காங்கயம் சுற்று வட்டார பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  காங்கயம் மின்வாரிய கோட்டத்திற்கு உள்பட்ட காங்கயம் துணை மின் நிலையம், பெரியார் நகர் துணை மின் நிலையம் உள்பட பல்வேறு துணை மின் நிலையங்கள் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது.  இதில், நகரப் பகுதிக்கு 24 மணிநேரம் முன்முனை மின்சாரமும். கிராமப் பகுதிக்கு சுழற்சி முறையில் ஒரு பகுதிக்கு காலை 6 பகல் 12 மணி வரையிலும், மற்றொரு பகுதிக்கு பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரையிலும், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையிலும் மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது.

 கிராமப்பகுதியில் கடந்த சில வாரங்களாக  பகலில் இரண்டு மணிநேரமும்,  இரவில் இரண்டு மணிநேரம்  மட்டுமே மும்முனை மின்சாரம் தரப்படுகிறது. சில நாட்களில் மிக குறைவான நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. மேலும் கடந்த 4 நாட்களாக அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இப்பகுதியில்,  நூல் மில், ரைஸ் மில், ஆயில் மில், விசைத்தறிகள் உள்ளன. இது தவிர பள்ளிகள், அரசு அலுவலகங்கள் உள்ளன.  இந்நிலையில், தற்போது அறிவிக்கப்படாத மின் வெட்டால் விவசாய பம்செட்டுகள், தொழில் நிறுவனங்கள் சரிவர இயக்க முடிவதில்லை, காலாண்டு தேர்வு துவங்கும் நிலையில் மாணவர்கள் படிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து காங்கயம் மின்வாரிய செயற்பொறியாளர் சீதாலட்சுமி கூறுகையில்,`மின் பற்றாக்குறை இருக்கிறது. பவர் உற்பத்தி குறைவாக உள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன் உள்ள பட்டியல்படி, காலை 6 மணி முதல் 8 மணி வரையும், 8 மணி முதல் 10 மணி வரையும், மாலை 6 முதல் 7 மணி வரை ஒவ்வொரு பகுதியாக பிரித்து சுழற்சி முறையில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இது விரைவில் சரிசெய்யப்படும்’ என்றார்.

Related Stories: