காலிகுடங்களுடன் மக்கள் சாலை மறியல்

கள்ளக்குறிச்சி, செப். 12: கள்ளக்குறிச்சி அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே சிறுவங்கூர் ஊராட்சிக்கு உட்பட்டது ரோடுமாமாந்தூர் கிராமம். இங்குள்ள வடக்கு பகுதியில் 350க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள மக்கள் குடிநீர் வசதிக்காக ஊராட்சி நிர்வாகம் சார்பில் மேல்நிலை நீர்த்தேக்க ெதாட்டி அமைக்கப்பட்டுள்ளது. அங்கு தண்ணீரை தேக்கி வைத்து பைப் லைன் மூலம் வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. ரோடுமாமாந்தூர் வடக்கு பகுதி மேடான பகுதி என்பதால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி முழுமையாக நிரம்பினால் மட்டுமே இப்பகுதி பைப்லைனில் தண்ணீர் வருகிறது. மற்றபடி தண்ணீர் வருவதில்லை. இதனால் மெயின்ரோட்டுக்கு சென்று தண்ணீர் பிடிக்கும் நிலை உள்ளது. இது கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து நடந்து வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த 50க்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் நேற்று காலை ரோடுமாமாந்தூர் பஸ் நிறுத்தம் பகுதியில் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலமுரளி, கொளஞ்சிநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது உடனடியாக கலைந்து செல்லாவிட்டால் கைது செய்வோம் என போலீசார் எச்சரித்தனர். இதனால் ஆவேசமடைந்த மக்கள் அவர்களிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய பொறியாளர் ராஜசேகரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண்பதாக உறுதி அளித்தனர்.

அப்ேபாது, அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்துவிட்டோம். போராட்டம் நடத்தினால் குறைகள் சரிசெய்யப்படும் என வாக்குறுதி மட்டுமே அளிக்கிறீர்கள். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி வாக்குவாதம் செய்தனர். தொடர்ந்து பேசிய அதிகாரிகள், ரோடுமாமாந்தூர் வடக்கு பகுதிக்கு தாராளமாக தண்ணீர் கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதை ஏற்ற கிராம மக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.போராட்டம் காரணமாக கள்ளக்குறிச்சி- சங்கராபுரம் சாலையில் சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு, சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.குடிநீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: