தீவிர அரசியலில் குதிக்க கண்ணன் திடீர் முடிவு

புதுச்சேரி,  செப். 12:    புதுவை காங்கிரஸ்  கட்சியில் ராஜ்யசபா உறுப்பினராக இருந்தவர் கண்ணன். இவர் கடந்த சட்டசபை  தேர்தலுக்கு முன் அக்கட்சியில் இருந்து விலகி அப்போதைய தமிழக முதல்வர்  ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில்  அதிமுக சார்பில் ராஜ்பவன் தொகுதியில் போட்டியிட்ட கண்ணன், காங்கிரஸ்  வேட்பாளரும், அவரது சிஷ்யருமான லட்சுமிநாராயணனிடம் தோல்வியை தழுவினார்.  ஜெயலலிதா மறைவுக்குபின் எந்த கட்சியிலும் ஆர்வம் காட்டாமல் அமைதி  காத்து வருகிறார். அவர் பாஜகவில் சேர இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால்  அதை கண்ணன் தரப்பினர் உறுதிசெய்யவில்லை.

  இதற்கிடையே புதுச்சேரி கடற்கரை  சாலையில் கடந்த மாதம் கவர்னர் கிரண்பேடி தலைமையில் நடந்த முன்னாள்  பிரதமர் வாஜ்பாய் அஸ்தி கரைப்பு நிகழ்ச்சியில் கண்ணன் கலந்து கொண்டார். இந்த நிலையில் கண்ணன் மீண்டும் அரசியல் களத்தில் குதிக்க முடிவு  செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தாண்டு பாராளுமன்ற தேர்தல்  நடைபெறவுள்ள நிலையில் தனது ஆதரவாளர்களை சந்தித்து அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து விவாதிக்கிறார். இதுதொடர்பாக இன்று மாலை புதுச்சேரி  எல்லைபிள்ளைசாவடியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் முன்னாள் எம்எல்ஏக்கள், நிர்வாகிகள்,  ஆதரவாளர்கள் கலந்து கொள்கின்றனர். கூட்டத்தில் புதுவையில் தற்போதைய  அரசியல் நிலவரம், பாராளுமன்ற தேர்தலில் எத்தகைய நிலைப்பாட்டை எடுப்பது,  புதிய கட்சியை தொடங்குவதா? என்பது உள்ளிட்ட பல்வேறு விவாதங்களை  தொண்டர்கள் மத்தியில் அவர் முன்வைத்து இறுதிமுடிவு எடுக்க உள்ளதாக  தெரிகிறது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது: ஒரு முக்கியமான முடிவை எடுக்கவுள்ளோம். இது தொடர்பாக எனது  ஆதரவாளர்களை அழைத்து கருத்து கேட்கவுள்ளேன். அவர்கள் என்ன நினைக்கிறார்கள். எடுக்கும் முடிவு சரிதானா?என்பதையெல்லாம் கேட்கவுள்ளேன். அதனை பொறுத்து உங்களை சந்தித்து தெரிவிப்பேன் என்றார்.  கண்ணன் மீண்டும் அரசியல் களத்தில் குதிக்க  முடிவெடுத்திருப்பது புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: