நலவாரிய அதிகாரியை கட்டிட தொழிலாளர்கள் முற்றுகை

புதுச்சேரி, செப். 12:  புதுச்சேரி கட்டிட தொழிலாளர் நல வாரியத்தில் 44 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. உயர்கல்வி படிக்கும் கட்டுமான தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு நலவாரியம் மூலம் கல்வி உதவித்தொகை கடந்த 2 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. மேலும், வாரியத்தில் உறுப்பினராக விண்ணப்பித்த தொழிலாளர்களுக்கு 2 வருடமாக பதிவு செய்யப்படவில்லை. இதனை கண்டித்து கட்டிட மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நேற்று தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் உள்ள நலவாரிய அலுவலகத்தில் திரண்டனர். தொழிலாளர் அதிகாரி வின்சென்ட் ஞானசாமி அமல்ராஜை முற்றுகையிட்டு சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

போராட்டத்துக்கு கட்டிட தொழிலாளர் சங்க (சிஐடியு) பொதுச்செயலாளர் கலியன் தலைமை தாங்கினார். தலைவர் ராமசாமி, பொருளாளர் அரிதாஸ் மற்றும் தொழிலாளர்கள் 50க்கும் மேற்பட்ேடார் கலந்து கொண்டனர்.கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான டோக்கன் அளித்து ஒன்றரை வருடமாகியும் இதுவரை அதனை ஏன் வழங்கவில்லை? என தொழிலாளர்கள் கேட்டதற்கு, வங்கியில் ரூ.8 கோடி பணம் செலுத்திவிட்டதாகவும், அங்கு சென்று கேட்குமாறும் அதிகாரி கூறினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தொழிலாளர்கள் நாங்கள் உங்களிடம் தான் கேட்போம். வங்கியில் போட்டிருந்தால் எங்களுக்கு கொடுத்திருப்பார்களே? என வாக்குவாதம் செய்தனர். கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொண்ட தொழிலாளர்கள் பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இப்போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: