ஆரம்ப சுகாதார நிலையங்களில் இன்சுலின் மருந்து தட்டுப்பாடு

புதுச்சேரி, செப். 12: புதுச்சேரி ஆரம்ப சுகாதார நிலையங்களில் இன்சுலின் மருந்து தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் நீரிழிவு நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் அரசு பொது மருத்துவமனை, ராஜிவ் காந்தி மகப்பேறு மருத்துவமனை உட்பட மொத்தம் 8 பெரிய மருத்துவமனைகளும், 4 சமுதாய நலவழி மையங்களும், 40 ஆரம்ப சுகாதார நிலையங்களும் உள்ளன. இங்கு புதுச்சேரி மட்டுமல்லாது தமிழகத்தை சேர்ந்தவர்களும்  சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக நிதி நெருக்கடி காரணமாக அனைத்து துறைகளிலும் சிக்கன நடவடிக்கையினை கடைபிடிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை மருந்து கொள்முதல் செய்யும் நிறுவனங்களுக்கு பல கோடிக்கணக்கில் பாக்கி வைத்திருந்துள்ளது. அந்நிறுவனங்கள் மருந்து சப்ளை செய்வதை முற்றிலும் நிறுத்திவிட்டன. இதனால் பல மருந்துகள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. சுகாதாரத்துறை தற்காலிக நடவடிக்கையாக அத்தியாவசியமான மருந்துகளை மட்டும் வேறு நிறுவனங்களிலிருந்து குறைந்த அளவு வாங்கி நோயாளிகளுக்கு வழங்கி வருகிறது. சிக்கன நடவடிக்கையாக வைட்டமின் பி-காம்ளக்ஸ் உள்ளிட்ட சில மாத்திரைகள் வாங்குவதையும் நிறுத்திவிட்டனர். இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Advertising
Advertising

 இதன் ஒரு பகுதியாக, தற்போது ஆரம்ப சுகாதார நிலையங்களில் நீரிழிவு நோயாளிகளுக்கான இன்சுலின் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியை ெபாறுத்தவரை 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன. அவர்களுக்கு அந்தந்த பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் என்ற விதத்தில் இன்சுலின் மருந்து வழங்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த 15 நாட்களாக  மருந்து தட்டுப்பாடு நிலவி வருகிறது.இதன் காரணமாக, நோயாளிகள் காலை, மாலை என இருவேளையும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்து இன்சுலின் போட்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். மேலும் சில ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்து கையிருப்பு இல்லாததால் தற்காலிகமாக வெளியே வாங்கிக்கொள்ளுமாறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ஏழை நோயாளிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

 இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, மருந்து நிறுவனங்களுக்கு பல கோடி பாக்கி உள்ளது. இதனால் வேறு நிறுவனங்களிலிருந்து குறைவாக இன்சுலின் வாங்கி நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. தற்போது கோரிமேட்டில் உள்ள அரசு மருந்தகத்தில் இன்சுலின் மருந்து உள்ளது. மருந்து கையிருப்பு இல்லாத ஆரம்ப சுகாதார நிலையங்கள் மருந்தகத்தை அணுகினால் இன்சுலின் கிடைக்கும். மேலும், மருந்து சப்ளை செய்த நிறுவனங்களுக்கு அரசு பல கோடி பாக்கி வைத்துள்ளது. அதனை உடனே வழங்கினால் மட்டுமே மருந்து தட்டுப்பாடு பிரச்னைக்கும் தீர்வு ஏற்படும் என்றனர்.

Related Stories: