ஆயுள் தண்டனை கைதியின் மனைவி, மகனை தாக்கி கொலை மிரட்டல்

புதுச்சேரி, செப். 12:    புதுவை வாணரப்பேட்டை பிரான்சுவாதோப்பு பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார். இவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு, புதிய பேருந்து நிலையத்தில் சகாயராஜ் என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள்தண்டனை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை மனைவி காயத்ரி பார்க்க செல்லும்போது உப்பளம் நேதாஜி நகரை சேர்ந்த பிரபல ரவுடி ஜனா என்ற பரிமேலழகனுடன் (31) பழக்கம் ஏற்பட்டது. ஜனா மீது கொலை, திருட்டு, அடிதடி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. பின்னர் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த ஜனா, காயத்ரி வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளதாக தெரிகிறது.

Advertising
Advertising

 இது காயத்ரியின் மகன் வசந்துக்கு பிடிக்கவில்லை. ஜனாவை வீட்டுக்கு வர வேண்டாம் என கூறுமாறு தாயிடம் வசந்த் கண்டிப்புடன் தெரிவித்துள்ளார். இதையடுத்து, இனிமேல் வீட்டுக்கு வர வேண்டாம் என ஜனாவிடம் காயத்ரி உறுதிபட கூறியுள்ளார். ஆனால், நேற்று முன்தினம் மாலை மீண்டும் காயத்ரியின் வீட்டுக்கு ஜனா சென்றார். வீட்டுக்கு வரக்கூடாது என கூறியும் ஏன் வந்தாய்? என காயத்ரியும், அவரது மகனும் கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஜனா, தரக்குறைவாக திட்டி, பீர் பாட்டிலை எடுத்து காயத்ரியை சரமாரியாக தாக்கினார். மேலும், வசந்தையும் பாட்டிலால் குத்த முயன்ற அவர், கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றார்.  இதுகுறித்து காயத்ரி, ஒதியஞ்சாலை காவல்நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், எஸ்ஐக்கள் கீர்த்தி, நாராயணசாமி ஆகியோர் வழக்குபதிந்து ஜனாவை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Related Stories: