சேலம் மாவட்டத்தில் டீசல் விலை உயர்வை கண்டித்து ரிக் உரிமையாளர்கள் போராட்டம்

சேலம், செப்.12: டீசல் உயர்வை கண்டித்து சேலத்தில் ரிக் உரிமையாளர்கள் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.டீசல் விலை உயர்வை கண்டித்து, சேலம் ரிக் லாரி உரிமையாளர்கள் நேற்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தனர். அதன்படி சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே சுமார் 50க்கும் மேற்பட்ட ரிக் வண்டிகளை நிறுத்தி வைத்து, தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர்.  இதைதொடர்ந்து ரிக் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஏஜென்ட்டுகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. சங்கத்தின் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். செயலாளர் சேதுராமகிருஷ்ணன், பொருளாளர் லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து செயலாளர் சேதுராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:

டீசல் விலை உயர்வினால் ரிக் தொழில் கடும் நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறது. கடந்த ஓராண்டாக மத்திய, மாநில அரசுகளின் ஜிஎஸ்டி வரியினால் தொழிலேயே செய்ய முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. வங்கி, நிதி நிறுவனங்களில் தவணையை கட்ட முடியாமல் தவித்து வருகிறோம். சேலம் மாவட்டத்தில் 600க்கும் மேற்பட்ட ரிக் வண்டிகள் இருக்கிறது. தொடர்ந்து வரும் இந்த தொழிலை சார்ந்துள்ள சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். மத்திய, மாநில அரசுகள் டீசல் விலையை குறைக்க வேண்டும். மீனவர்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்குவது போல, குடிநீருக்காக போர் போடும் எங்களுக்கும் மானியம் வழங்க வேண்டும். டீசல் விலையை குறைக்காவிட்டால் பொதுமக்களிடம் அதற்கான தொகையை வசூலிக்க வேண்டிய நிலை ஏற்படும். ஓரிரு நாட்களில் கட்டணவிலை உயர்வு அறிவிக்கப்படும். எனவே, மத்திய, மாநில அரசுகள் டீசல் விலையை குறைக்க வேண்டும்.

Related Stories: