×

ரத்த வகைகளுக்கேற்ற உணவுகள்!

நன்றி குங்குமம் தோழி

நாம் உண்ணும் உணவானது செரிமானமடைந்து, பல்வேறு சத்துக்கள் உட்கிரகிக்கப்பட்டு, ரத்தத்தின் வழியாக அனைத்து உறுப்புகளுக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது. மனிதனின் ஆரோக்கியம் என்பது பெரும்பாலும் ரத்தத்திலுள்ள பகுதிப் பொருட்களைவைத்தே நிர்ணயிக்கப்படுகிறது அல்லது நோய்கள் ஏற்படின் ரத்தத்தில் பல பரிசோதனைகள் செய்த பின்னரே என்ன நோய் என்பது கண்டறியப்படுகிறது. பிறந்த குழந்தை முதல் அனைவரும் தங்களது ரத்தவகையை தெரிந்து வைத்திருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் ரத்ததானம் பற்றியும், எந்த ரத்தவகை உள்ளவர்கள் யாருக்கு ரத்தம் வழங்க வேண்டும் யாரிடமிருந்து பெறவேண்டும் என்ற அடிப்படையான செய்திகளையும் கட்டாயம் அறிந்திருத்தல் அவசியமாகும்.

ரத்த வகைகளைத்தான் நாம் அறிந்திருக்கிறோமே தவிர ஒவ்வொரு வகை ரத்தத்திற்கும் ஒரு தனித்தன்மை உண்டு என்பது பலருக்குத் தெரியாது. அது மட்டுமல்லாமல், ஒவ்வொரு ரத்த வகைக்கும் அதற்கேற்றாற்போல் உணவு வகையும் மாறுபடுகிறது. ஒருவரின் உடலில் ஓடும் ரத்தத்தின் தன்மையானது, அவருக்கு எந்தெந்த நோய்களை எளிதில் கொண்டுவரும், அவரின் நோய்எதிர்ப்புச் சக்தியைக் குறைக்குமா? அல்லது ஒவ்வாமையை ஏற்படுத்துமா? அவர் எந்த வகை உணவுப்பொருட்களை உண்டால் அவரின் உடலானது நோய்களிலிருந்து காப்பாற்றப்படும் என்பதற்கேற்ப உணவு முறைகளை சற்றே மாற்றி பழகினார்கள் என்றால், பல்வேறு உடல் உபாதைகளிலிருந்து தற்காத்துக்கொள்ள உதவியாக இருக்கும் என்றும் ரத்த வகை உணவு பற்றிய ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன.

ரத்தவகைகளுக்கேற்ற உணவு முறைகளைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், ரத்தத்தைப் பற்றியும், அதன் வகைப்பாடு பற்றியும் கட்டாயம் அறிந்திருக்கவேண்டும்.   அனைவரது உடம்பிலும் ஓடும் ரத்தம் சிவப்பு நிறத்தில் இருப்பதால் அனைத்தும் ஒரே மாதிரியான ரத்தம் என்று கூறமுடியாது. மனித ரத்தமும் வகைப்படுத்தப்பட்டு, ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு சிறப்புத் தன்மை இருக்கிறதென்று அறியப்பட்டுள்ளது. மனிதனின் உடலில் தோராயமாக உள்ள 5 லிட்டர் இரத்தத்தில், 3.5 லிட்டர் பிளாஸ்மா என்னும் திரவமும், ரத்த செல்கள் என்ற நுட்பமான பகுதிப்பொருட்களும் அடங்கியுள்ளன. நுண்பொருட்களில், ரத்த சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், ரத்தத்தட்டுக்கள், ஈஸ்னோபில், நியூட்ரோபில், பேசோபில், லிம்ப்போசைட்ஸ், மோனோசைட்ஸ் போன்றவை அடங்கும்.

மனித ரத்தமானது1990 ம் ஆண்டில் டாக்டர் லாண்ட்ஸ்டெய்னர் (Landsteiner) என்பவரால் வகைப்படுத்தப்பட்டது. இவர், ரத்தத்திலுள்ள சிவப்பணுக்களில் ஆன்டிஜன் B மற்றும் ஆன்டிஜன் U என்னும் இரு புரதப்பொருட்கள் இருப்பதாகக் கண்டறிந்தார். இந்த ஆன்டிஜன்கள் ரத்த சிவப்பணுக்களின் மேற்புறத்தில் தங்கி இருக்கும். உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய எந்த பொருளும் ஆன்ட்டிஜன் என்றே அழைக்கப்படுகிறது. அவை நுண்கிருமியாகவோ, நச்சுப்பொருளாகவோ அல்லது தூசியாகக்கூட இருக்கலாம். இந்த பொருட்களை அழிப்பதற்காகவும், அவைகளிடமிருந்து உடலைக் காப்பதற்காகவும் ரத்தத்திலுள்ள வெள்ளையணுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் ஒரு வகையான நோய் எதிர்பொருளே ஆன்ட்டிபாடி என்பவையாகும். ரத்தத்தின் பிளாஸ்மா திரவத்தில், இருவகை நோய் எதிர்பொருட்களான ஆன்ட்டிபாடி B மற்றும் ஆன்டிபாடி U என்பவையும் இருப்பதாக அறியப்பட்டது.

மனித ரத்தம் நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை, ரத்த வகை A, ரத்த வகை B, ரத்த வகை AB மற்றும் இரத்த வகை O என்பவையாகும். மேற்கூறியவாறு, ரத்தத்திலுள்ள ஆன்ட்டிஜன் மற்றும் ஆன்ட்டிபாடி ஆகியவற்றை வைத்தே லாண்ட்ஸ்டெய்னர் ரத்தத்தை வகைப்படுத்தினார். அதனைப் பின்பற்றியே ஒருவருடைய ரத்தம் மற்றவருக்கு தேவையான நேரத்தில் செலுத்தப்பட்டது. இருப்பினும் சில சிக்கல்கள் ஏற்பட்டதால், 1940 ம் ஆண்டு காலத்தில், வியன்னர் (Wiener)) என்பவருடன் இணைந்து,  லாண்ட்ஸ்டெய்னர் Rh factor என்னும் Rh ரத்த வகைப்பிரிவைக் கண்டுபிடித்தார். இந்த சிறப்பு ஆன்ட்டிஜன் Rh ஆனது, Rhesus வகை குரங்குகளின் ரத்தத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதால் அதன் பெயராலேயே வழங்கப்பட்டது.

ஒருவரது ரத்தத்தில் Rh ஆன்ட்டிஜன் இருந்தால் அந்த ரத்தம் Rh+ என்றும் இல்லாவிடில் Rh­ என்றும் பிரிக்கப்பட்டது. ஒருவரின் ரத்தம் மற்றொருவர் உடலில் செலுத்தப்படும்போது, ரத்தம் உறைதல் அல்லது ரத்தம் கட்டுதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிவப்பணுக்களில் பிளவு ஏற்பட்டு அவை செய்யும் பணிகள் வெகுவிரைவாக முடக்கப்பட்டு உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் நிலைமையை ஏற்படுத்திவிடும். எனவே, ரத்தத்தில் உள்ள ஆன்ட்டிஜன் மற்றும் ஆன்ட்டிபாடி ஆகியவற்றை சோதனை செய்த பின்னரே ஒருவருக்கு ரத்தம் அளிக்கப்படுகிறது. கீழ்வரும் அட்டவணை ஒருவருடைய ரத்தத்தில் ஆன்ட்டிஜனும் ஆன்ட்டிபாடியும் எவ்வாறு அமைந்துள்ளது என்று விளக்குகிறது.

ரத்த வகைக்கும் உணவிற்கும் எப்படி தொடர்பு ஏற்படுகிறது “Eat right for your type” என்ற புத்தகத்தை எழுதிய டாக்டர் பீட்டர் டி ஆடமோ, நாம் உண்ணும் உணவிலிருக்கும் பொருட்கள் ரத்தத்துடன் சேரும்போது நிகழும் சில வேதிவினைகளுக்கு லெக்டின் (Lectin) என்னும் புரதங்களே காரணம் என்று கூறுகிறார். இந்த லெக்டின் புரதமானது, பீன்ஸ், பிற பருப்பு வகைகள், கோதுமை முளை, சோளம், பார்லி அரிசி போன்ற பொருட்களில் காணப்படுகிறது. இதிலுள்ள மூலக்கூறுகள் ஏதாவது ஒரு உடல் உறுப்பை குறியாக வைத்து அங்கே ஒன்றோடொன்று சேர்ந்து உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு தெரியாமலேயே ஒட்டிக்கொள்கின்றன (agglutination).

சமைக்கும் முறை, உணவுப்பொருளிலுள்ள புரதத்தின் தன்மை ஆகியவற்றைப் பொருத்துதான் இந்த சிக்கல் ஏற்படுகிறது. எனினும் 95 சதவிகித உணவுப் பொருட்களிலுள் லெக்டின் எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை. மீதமுள்ள 5 சதவிகிதம் மட்டுமே ஒருவரின் நோய் எதிர்ப்புச் சக்தியை பொருத்தும் அவர்களின் ரத்த வகையைப் பொருத்தும் உடலில் பிரச்னைகளை ஏற்படுத்துகின்றது.  மேலும், பருப்புகளை தோல்நீக்கி ஊறவைத்தல், புளிக்க வைத்தல், அவித்தல், வேகவைத்தல், வறுத்து சமைத்தல் போன்ற செயல்பாடுகளின் மூலமாக இந்த லெக்டினின் இயற்கைத் தன்மையின் வீரியம் குறைக்கப்படுகிறது அல்லது அழிக்கப்படுகிறது.

ஒருவருடைய உணவுப்பழக்கத்தைக் கூர்ந்து நோக்கினால்,அவர்களுடைய ரத்தவகையை ஓரளவு அறிந்துவிட முடியும் என்றும் கூறப்படுகிறது. ரத்த வகைகளுக்கேற்ற உணவு முறை ஒருபுறம் பிரபலமாகிக் கொண்டிருந்தாலும், உணவுக்கும் ரத்த வகைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் ஒரு புறம் ஆராய்ச்சிகள் கூறுகின்றன. கனடாவின் டோரோன்டோ பல்கலைக்கழகத்தின் உணவு மரபியல் ((Nutrigenomics) துறைப் பேராசிரியர் டாக்டர். ஆஹமத் எல் சோஹமி என்பவர் மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவுகள் இவ்வாறு தெரிவிப்பதாகப் பதிவிட்டுள்ளார்.

இருப்பினும், சில குறிப்பிட்ட உணவுகளைக் கொடுக்கும்போது, ஒரு சில ரத்த வகைகள் சில மாறுதல்களைக் கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். எடுத்துக்காட்டாக, O ரத்தவகை ரத்தத்தில் கொழுப்பு குறைந்ததாகவும், A வகை ரத்தத்தில் உடல் எடை விகிதம் (BMI), ரத்த அழுத்தம், இடுப்பு சுற்றளவு ஆகியவை குறைந்ததாகவும், B வகை ரத்தத்தில் HDL கொழுப்பு அதிகரித்ததாகவும், AB வகையில் ரத்த அழுத்தம் குறைந்து இன்சுலின் அளவும் குறைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ரத்தவகை “A”  

ரத்தவகை A வானது, சுமார் 2500 லிருந்து 1500 வருடங்களுக்கு முன்னர் ஆசியா அல்லது மத்திய கிழக்கு நாடுகளில் இருந்திருக்குமென்று மரபியல் துறை ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. இந்த காலகட்டத்தில் விவசாயமே பிரதான தொழிலாக இருந்ததால், தானியங்கள், பருப்புகள் ஆகியவற்றைச் சார்ந்தே இருக்க நேர்ந்தது. வேட்டையாடி உணவு தேடுதலை விட விவசாயத்தில் ஒருவருக்கொருவர் கட்டாயம் தொடர்புகொள்ளவேண்டும், உதவியாக இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் மனித சமூகம் நிலையான ஒரு இடத்திலேயே இருக்கவேண்டிய நிலைக்கு உள்ளானது. இதன் காரணமாக, ரத்த வகை “A” மனித சமூகம் மிக விரைவாக பரவியது. இவ்வகை ரத்தம் உடையவர்கள் மேற்கு ஐரோப்பாவில் அதிகம் காணப்பட்டனர். பல்வேறு வகையான உணவு மாறுதல்களுக்கு உட்பட்டிருந்தாலும் விவசாய தானியங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் “A” வகை ரத்தம் உள்ளவர்களுக்கு அதிகம் என்று அறியப்படுகிறது.

“A” வகை ரத்தம் உள்ளவர்களின் இயல்புகள்

உணவுப்பொருட்களில் தானியங்களை அதிகம் விரும்பி உண்ணுபவர்களாக இருப்பார்கள்.மென்மையான செரிமான மண்டலத்தை உடையவர்களாகவும் அசைவ வகை உணவுகளை எளிதில் செரிக்கும் தன்மை இல்லாதவர்களாகவும் இருப்பார்கள். ஆனாலும் இவ்வகை ரத்தம் உடையவர்களின் நோய் எதிர்ப்புச்சக்தி போதுமான தாங்குதிறன் கொண்டது.
அசைவ உணவுகளைவிட சைவ வகை உணவுகள் இவர்களுக்கு நன்றாக ஆரோக்கியத்தைக் கொடுக்கும். ஆனால், சரியான உணவுப் பழக்கம் இல்லாவிடில் நோய் எதிர்ப்புத்திறன் குறைந்து, முதுமையை நோக்கிச் செல்லும்போது இதய நோய்கள், நீரிழிவு நோய் எளிதில் ஏற்பட வாய்ப்புண்டு.  

நிமோனியா, குடற்புழுக்கள், மூட்டுவாதம் போன்ற வேறு சில நோய்களும் ஏற்பட்டு அவர்களின் ஆரோக்கியத்தைக் குறைக்கலாம். சற்றே விரும்பி அசைவ உணவை உண்ணும்போது, சரியான செரிமானம் நடக்காமல், குடல் சம்பந்தமான நோய்கள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு.அடிக்கடி மனஉளைச்சலுக்கு உள்ளாகும் A வகை ரத்தம் உடையவர்கள் யோகா மற்றும் மூச்சுப் பயிற்சியை மேற்கொள்ளலாம். ரத்தவகை “A” உள்ளவர்கள் அசைவ உணவுகளைத் தவிர்த்து, அரிசி, கோதுமை, சோளம், கேழ்வரகு, தினை, வரகு, சாமை போன்ற சிறுதானியங்கள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட உணவுகளையும் பருப்பு வகைகளையும் அன்றாட உணவாக எடுத்துக்கொள்ளலாம். அடிக்கடி என்றில்லாமல், வாரம் ஒருமுறை என்ற அளவில் மாமிச உணவுகளை உண்ணலாம்.

அதனுடன் செரிமான சக்தியை அதிகரிக்கும் மிளகு, சீரகம், பூண்டு, இஞ்சி, புதினா, ஓமம், சுக்கு போன்ற பொருட்களை அசைவ உணவின்போது சேர்த்துக் கொள்வதால், செரிமானக் கோளாறுகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். இவை ஒருபுறமிருந்தாலும் அமெரிக்க நீரிழிவு கூட்டமைப்பு (The American Diabetic Association) எச்சரித்துள்ளபடி எந்த ஒரு குறிப்பிட்ட உணவு வகையையும் தவிர்த்தல் சரியான உணவு முறையாகாது என்பதும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் (Indian Council Medical Research) அறிவுறுத்தியுள்ளபடி எந்த ஒரு மனிதனுக்கும் அவனுடைய வயதுக்கும் உடல் எடைக்கும் தகுந்தவாறு நிர்ணயிக்கப்பட்டுள்ள சரிவிகித உணவே அனைத்து வகையிலும் அவனுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கவல்லது என்பதையும் சற்று சிந்திக்க வேண்டும்.

தொகுப்பு : ஸ்ரீ தேவி குமரேசன் 

Tags :
× RELATED பலாப்பழத்தின் பயன்கள்!