நகராட்சி பகுதியில் கலங்கி வரும் குடிநீர்

பொள்ளாச்சி, செப். 12:  பொள்ளாச்சி நகராட்சி பகுதியில், பொதுக்குழாயிலிருந்து செம்மண் நிறத்தில் கலங்கி வரும் குடிநீரால் பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர். பொள்ளாச்சியை அடுத்த அம்பராம்பாளையத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பிரதான குழாய் மூலம் கொண்டுவரப்படும் குடிநீர்  நகராட்சிக்குட்பட்ட மேல்நிலை தொட்டிகளில் நிரப்பப்பட்டு அந்தந்த வார்டு பகுதிகளுக்கு  வினியோகிக்கப்படுகிறது.

 ஆனால்,  நகராட்சிக்குட்பட்ட பகுதியில் நடக்கும் பாதாள சாக்கடை பணிக்காக, பொக்லைன் இயந்திரம் கொண்டு ரோட்டை தோண்டும்போது அங்கு பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்கள் உடைப்பு ஏற்படுவது அதிகரித்துள்ளது. இதில் கடந்த சிலநாட்களாக மார்க்கெட்ரோடு, ஜோதிநகர், மகாலிங்கபுரம் உள்ளிட்ட பல இடங்களில் ஆங்காங்கே உடப்பு ஏற்பட்ட குழாயை சரிசெய்யும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். ஆனால், அந்த பணியை முழுமையாக செய்யாமல் அரைகுறையாக செய்து முடிப்பதால், மேல்நிலை தொட்டியிலிருந்து குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் திறக்கும்போது, செம்மண் நிறத்தில் கலங்கியபடி வந்துள்ளது. இதில் நேற்று ராஜாமில்ரோடு, மார்க்கெட்ரோடு, கூட்செட்ரோடு, ஏபிடிரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் பொதுக்குழாயில் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. ஆனால், அந்த தண்ணீர் செம்மண் நிறத்தில் வந்ததால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

குடிப்பதற்கும், அத்தியாவசிய தேவைக்கும் பயன்படுத்தப்படும் குடிநீரில் செம்மண் கலந்து வந்ததுடன், தூசு படிந்து இருந்ததால், அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. ஆங்காங்கே குழாய் உடைப்பு ஏற்பட்டு, அதனை முறையாக சரிசெய்யாமல் விட்டுள்ளதால், சுகாதாரமான குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இதுபோன்று இன்னும் பல வார்டுகளில் சுகாதாரமற்ற குடிநீர் வினியோகத்தால் நோய்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, அதனை சரிசெய்வதற்கான நடவடிக்கையில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட வேண்டும் என, தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: