சர்க்கார்பதியில் மின் உற்பத்தி துவக்கம்

பொள்ளாச்சி,செப்.12: பொள்ளாச்சியை அடுத்த கான்டூர் கால்வாயில் ஏற்பட்ட மண்சரிவு சீரமைக்கபட்டதால், திருமூர்த்தி அணைக்கு மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது.  பொள்ளாச்சியை ஆடுத்த பரம்பிக்குளத்தில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர், தூணக்கடவு சென்று அங்குள்ள சுரங்கப்பாதை வழியாக சர்க்கார்பதி நீர்மின் நிலையம் வந்தடைகிறது. பின், சர்க்கார்பதியில் மின்உற்பத்தி செய்யப்பட்டு, கான்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு செல்கிறது. இந்நிலையில், கடந்த மாதம் தொடர்ந்து பெய்த தென்மேற்கு பருவமழையால் வால்பாறை மலைப்பாதையில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டது.   இதில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சர்க்கார்பதியிலிருந்து சுமார் 14கிலோ மீட்டர் தூரத்தில், ஆழியார் அருகே வால்பாறை மலைப்பாதையில், சுமார் 10க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து பாறைகள் மற்றும் மரக்கட்டைகள் உருண்டு கான்டூர் கால்வாயில் விழுந்துள்ளது. இதனால் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 6ம்தேதி  தூணக்கடவிலிருந்து கான்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

   தண்ணீரின் அளவு குறைந்தவுடன், கால்வாயில்  ஆங்காங்கே கிடந்த பாறை மற்றும் மரகட்டைகளை பொதுப்பணித்துறை ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். மேலும், வாகனங்கள் செல்லும் பாதையில் விழுந்த மண்சரிவு சீரமைக்கும் பணி துவங்கி கடந்த 9ம் தேதியன்று நிறைவடைந்தது.  நேற்று முன்தினம் 10ம் தேதி முதல்,  தூணக்கடவு அணையிலிருந்து  கான்டூர் கால்வாயில் மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு சுமார் 550 முதல் 650கன அடிவரையிலும் தண்ணீர் திறப்பால், சர்க்கார்பதி நீர் மின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி துவங்கப்பட்டுள்ளது. இருப்பினும், கான்டூர் கால்வாயில் மீண்டும் மண்சரிவு ஏற்படுகிறதா என தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertising
Advertising

Related Stories: