குடியிருப்பில் நீர் புகும் அபாயம் உள்ளதால் கோவை குளங்களின் ஷட்டர் அடைப்பு

கோவை, செப்.12: கோவை உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம் வாய்க்கால், ஷட்டர் அடைக்கப்பட்டது. இந்த நீரை திறந்தால் வெள்ள அபாயம் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கோவை உக்கடம் பெரிய குளம் 69.95 கன மீட்டர் நீர் தேக்க திறன் கொண்டது. குளத்தின் கரை 2,880 மீட்டர் நீளத்திலும், 19.10 அடி உயரத்திற்கு நீர் தேக்கும் வசதியும் உள்ளது. ெபரிய குளத்தில் 1,425 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. வாலாங்குளம் 14.75 அடி உயரத்தில் நீர் தேக்கும் வசதியுள்ளது. 27.88 கன மீட்டர் அளவிற்கு நீர் தேங்கியுள்ளது. ஆயக்கப்பட்டு பரப்பு 870 ஏக்கர். இந்த இரு குளங்களும் தற்போது நிரம்பியுள்ளது.

 குளங்கள் முழுமையாக நிரம்பிய பின்னர் உபரி நீர் ஷட்டர் வழியாக அடுத்த குளத்திற்கு விடப்படவேண்டும். குளம் இல்லாவிட்டால் ஆற்றில் நீரை திருப்பி விடவேண்டும். ஆனால், கடந்த 2 நாளுக்கு முன் உக்கடம் பெரியகுளத்தின் நீர் வெளியேறும் வாய்க்காலை பொதுப்பணித்துறை நிர்வாகத்தினரும், கோவை மாநகராட்சி நிர்வாகத்தினரும் அடைத்து விட்டனர். சேத்துமா வாய்க்கால் வழியாக தண்ணீர் வரும் பாதையும் அடைக்கப்பட்டு, நொய்யல் ஆற்றுக்கு முழு அளவிலான சாக்கடை கழிவு நீரை திருப்பி விட்டனர். உக்கடம் பஸ் ஸ்டாண்ட்டை ஒட்டியுள்ள வாய்க்காலில், நீரை தடுத்து மணல் மூட்டைகளை குவித்து மாநகராட்சியினர் அடைப்பு ஏற்படுத்தியுள்ளனர். இதேபோல், வாய்க்காலின் எல்லை பகுதியிலும் மணல்
Advertising
Advertising

தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. பெரிய குளத்தில் இருந்து கரும்புக்கடை வழியாக செல்லும் ஷட்டரும் திறக்கப்படவில்லை. ஷட்டரும், வாய்க்காலும் சீரமைக்கப்படாமல் இருப்பதால் திறக்கப்படாமல் விடப்பட்டது. உக்கடம் வாலாங்குளத்தின் கடைசியில், அதாவது போக்குவரத்து கழக அலுவலகத்தை ஒட்டியுள்ள வாய்க்காலும் இதேபோல் மணல் மூட்டைகள் குவித்து அடைக்கப்பட்டுள்ளது. இந்த வாய்க்கால் அடைப்பு மற்றும் ஷட்டர் திறந்தால் வெள்ளம் பாயும். குள வாய்க்கால் சீரமைக்கப்படாமல் இருப்பதால், குடியிருப்பில் வெள்ளம் புகுந்து விடும் நிலையிருப்பதால் நீர் திறக்க மாநகராட்சி நிர்வாகம் மறுத்து விட்டது.  

 இதேபோல் குளத்தின் தெற்கு கரை பகுதியில், அதாவது பைபாஸ் ரோட்டில் உள்ள நொய்யல் ஆற்றுக்கு நீர் திறக்கும் ஷட்டரும் பழுதடைந்து கிடக்கிறது. இந்த ஷட்டரை திறந்தால் பைபாஸ் ரோட்டை ஒட்டியுள்ள குடியிருப்பில் வெள்ளம் பாயும் அபாயம் இருக்கிறது. எனவே நீரை திறக்க மாநகராட்சி நிர்வாகம் முன் வரவில்லை. ஆற்றுக்கு செல்லும் வாய்க்காலை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொதுப்பணித்துறையினர் கூறுகையில், ‘‘ வாலாங்குள நீரை திறந்தால் அம்மன் குளம் அல்லது சங்கனூர் பள்ளத்திற்கு நீர் பாயும். அம்மன் குளம் 15 ஆண்டிற்கு முன்பே மூடப்பட்டது. சங்கனூர் பள்ளம் புதர் மண்டி கிடக்கிறது. எனவே தான் வாய்க்காலை மூடி அடைத்து விட்டோம். நொய்யல் ஆற்றுக்கு ஷட்டர் திறந்து தண்ணீர் விட வாய்ப்பில்லை. பல ஆண்டாக இந்த வழியாக தண்ணீர் திறக்கப்படவில்லை. வாய்க்காலின் நிலை முழுமையாக தெரியவில்லை. இனி மழை பெய்து தண்ணீர் வந்தாலும் இந்த இரு குளங்களுக்கு நீர் விடவேண்டிய அவசியமில்லை, ’’ என்றனர்.

Related Stories: