கோவை குளங்களில் விநாயகர் சிலை கரைக்க பாதுகாப்பு ஏற்பாடு தயார்

கோவை, செப். 12: கோவை குளங்களில் விநாயகர் சிலை கரைப்புக்கு பாதுகாப்பு ஏற்பாடு தயார் செய்யப்பட்டுள்ளது.கோவை நகரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் 393 சிலை வைத்து பூஜை செய்ய போலீசில் அனுமதி கோரியுள்ளனர். விநாயகர் சதுர்த்தியை தொடர்ந்து, அடுத்த சில தினங்களில், தெப்பக்குளம் மைதானம், ராஜவீதி, டாடாபாத், பூமார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகள் வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது. இதற்காக, கோவை குறிச்சி குளம், சிங்காநல்லூர் குளம், முத்தண்ணன் குளம், பேரூர் குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் மாநகர போலீஸ் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தென்மேற்கு பருவமழை கைகொடுத்த காரணத்தால், குளங்கள் நிரம்பியுள்ளன. இதனால், சிலைகளை எளிதாக கரைக்க முடியும். அதே நேரத்தில், குளத்தில் உள்ள சேறு, சகதியில் யாரும் சிக்கி விடக்கூடாது என்பதால் குளக்கரையில் இருந்து, குறிப்பிட்ட சில அடி தூரம் வரை மணல் மூட்டை அடுக்கப்பட்டுள்ளது. குளக்கரையில் இருந்து, குளத்துக்குள் தவறி விழுந்து விடக்கூடாது என்பதால் சுற்றிலும் தடுப்புக்கட்டை அமைக்கப்பட்டுள்ளது. ‘’பாதுகாக்கப்பட்ட பகுதி, யாரும் அத்துமீறி உள்ளே நுழையக்கூடாது’’ என போலீசார் எச்சரிக்கை பலகையும் அமைத்துள்ளனர். சிலை கரைப்பு நாளில் இரவுநேரம் வரை சிலைகளை கரைக்க வசதியாக அன்றையதினம் மட்டும் மின்விளக்கு வசதி செய்யவும் போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.கோவை கோவை புறநகர் பகுதியில் 1,420 சிலைகள் வைக்கப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் சிலை கரைப்பின்போது அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க முழுவீச்சில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என போலீசார் கூறினர்.

Related Stories: