நாட்டின் முன்னேற்றத்திற்கு கல்வி மிகவும் அவசியம்

பெ,நா,பாளையம்,செப்.12: நாட்டின் வளர்ச்சிக்கு கல்வி மிகவும் அவசியம் என்று கோவையில்  நடந்த விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசினார்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயாவில், சுவாமி விவேகானந்தர் சிக்காகோ நகரில் ஆற்றிய உரையின் 125வது ஆண்டு விழா நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு பேசியதாவது: நாட்டில் எந்த துறையில் வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்றாலும் கல்வி மிக முக்கியமானது. மாணவர்களின் முன்னேற்றம் தான் நாட்டின் முன்னேற்றம். லஞ்சம், ஊழல் அற்ற நாட்டை மாணவர்களால் மட்டுமே உருவாக்க முடியும். ஒவ்வொருவரும் நல்ல குணநலன்களோடு இருப்பதோடு பிறமதங்களில் உள்ள நல்ல கருத்துகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்,

இவ்வாறு கவர்னர் பேசினார். நிகழ்ச்சியில் கல்லுாரியின் செயலாளர் காரிஷ் சதானந்தா, துணைவேந்தர் ஆத்மபிரியானந்தா, மத்திய அரசின் தேசிய திறந்தவெளி பல்கலை கழக தலைவர் சந்திரபூஷன் சர்மா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக இந்த விழாவில் கலந்து கொள்ள  தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று மதியம் சென்னையில் இருந்து கோவை வந்தார். பின்னர்,நேற்று மாலை 6.10 மணிக்கு கோவையிலிருந்து விமானம் மூலமாக சென்னை சென்றார். கவர்னர் வருகையை முன்னிட்டு கோவை மாநகரில் போலீஸ் கமிஷனர் பெரியய்யா தலைமையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories: