கழிவுநீரோடைகளை தூர்வாரக்கோரி கோவில்பட்டி ஆர்.டி.ஓ. அலுவலகம் முற்றுகை

கோவில்பட்டி, செப். 12: கோவில்பட்டி  நகரில் உள்ள கழிவுநீரோடைகளை தூர்வாரக்கோரி ஆர்டிஓ அலுவலகத்தை பாஜவினர் முற்றுகையிட்டனர்.

 கோவில்பட்டி நகரில் மெயின்ரோடு, மார்க்கெட்ரோடு, புதுரோடு,  மாதாங்கோவில்தெரு, கதிரேசன்கோவில் ரோடு போன்ற பல்வேறு இடங்களில் உள்ள கழிவுநீரோடைகள் நீண்ட காலமாக தூர்வாரப்படாததால், ஓடைகளில்  குப்பை மற்றும் கழிவுநீர் தேங்கி மணல் மேடாகிவிட்டது. இதனால் மழை  காலங்களில் கழிவுநீரோடைகளில் தண்ணீர் சீராக செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.  நேற்றுமுன்தினம் நகரில் பெய்த கன மழையால் இந்த ஓடைகளில் மழைநீருடன்  கழிவுநீரும் கலந்து சாலைகளில் வெள்ளமாக ஓடியதால் சுகாதாரகேடு ஏற்பட்டது.  நகரில் உள்ள இளையரசனேந்தல் ரோடு ரயில்கே சுரங்கப்பாதையிலும் மழைநீர் குளம்  போல் தேங்கி நின்றது. இந்நிலையில் கோவில்பட்டி நகரில் உள்ள கழிவுநீரோடைகளை  போர்க்கால அடிப்படையில் தூர்வாரி ஆழப்படுத்தக்கோரி நகர பா ஜ சார்பில் நகர  தலைவர் வேல்ராஜா தலைமையில் அக்கட்சியினர் கோவில்பட்டி ஆர்.டி.ஓ. அலுவலகத்தை  முற்றுகையிட்டனர். பின்னர் கழிவுநீரோடைகளை விரைவில் தூர்வார நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்றும், இல்லாதபட்சத்தில் நகரில் படகுகள் விடும் போராட்டம்  நடத்தப்படும் என கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதில்  மாவட்டச் செயலாளர் சிவந்திநாராயணன், நகரச் செயலாளர் மாரியப்பன், நகர  பொதுசெயலாளர் முனியராஜ், விவசாய அணி மாநில செயலாளர் ராமகிருஷ்ணன்,  பாலமுருகேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதையடுத்து பா.ஜ.வினர்  தங்களது கோரிக்கை மனுவை ஆர்.டி.ஓ.விடம் அளித்தனர். மனுவை பெற்று கொண்ட  ஆர்.டி.ஓ.விஜயா, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்தே போராட்டத்தை பாஜவினர் கைவிட்டு அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.

Related Stories: