குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் ஆர்டிஓ அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

தா.பேட்டை, செப்.12:  தா.பேட்டை அடுத்த தொட்டியப்பட்டி கிராம பொதுமக்கள் குடிநீர் கேட்டு முசிறி ஆர்டிஓ அலுவலகத்தை காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.தா.பேட்டை அடுத்த வாளவந்தி ஊராட்சிக்குட்பட்ட தொட்டியப்பட்டி, களத்துப்பட்டி, நடுப்பட்டி, கோமாளியூர், சித்திரப்பட்டி, கீழதொட்டியப்பட்டி, கம்பளிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் நேரிலும், மனுக்கள் வாயிலாக வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இதையடுத்து அப்பகுதி மக்கள் கடந்த மாதம் தொட்டியப்பட்டி-வாளவந்தி சாலையில் மறியல் செய்தனர். குடிநீர் தட்டுப்பாட்டினை போக்குவதாக சமாதான பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.  இந்நிலையில் நேற்று அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினருடன் அப்பகுதி மக்கள் முசிறி ஆர்டிஓ அலுவலகத்தை காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டனர். ஆர்டிஓ ரவிச்சந்திரன், ஒன்றிய ஆணையர்கள் பெரியசாமி, சந்திரசேகரன் ஆகியோரிடம் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண உத்தரவிட்டார்.  பேச்சுவார்த்தையின்போது முசிறி இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா மற்றும் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் வீரவிஜயன், முருகேசன், சுப்ரமணியன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Related Stories: