தஞ்சை ஆர்டிஓ அலுவலகத்தில் கருத்து கேட்பு கூட்டத்தை விவசாயிகள் புறக்கணிப்பு

தஞ்சை, செப். 12:  தஞ்சையில் நேற்று நடந்த கருத்து கேட்பு கூட்டத்திற்கு 2 மணி நேரத்திற்கும் மேலாக ஆர்டிஓ சுரேஷ் வராத காரணத்தால் விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து காய்ந்த நாற்றங்காலுடன் ஆர்ப்பாட்டம் செய்தனர். தஞ்சை ஆர்டிஓ அலுவலகத்தில் ஆர்டிஓ சுரேஷ் தலைமையில் நேற்று(11ம் தேதி) விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டம் காலை 10 மணிக்கு நடப்பதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தஞ்சை, பூதலூர், செங்கிப்பட்டி திருவையாறு, ஒரத்தநாடு, திருவோணம் ஆகிய பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஆர்டிஓ அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது ஆர்டிஓ சுரேஷ் அலுவலகத்தில் இல்லை. இதையடுத்து விவசாயிகள் அலுவலகத்தில் கூட்டம் நடைபெறும் அறையில் அமர்ந்து இருந்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:  சுகுமாறன்: தஞ்சை மாவட்டத்தில் 19 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். ஆனால் இதுநாள் வரை நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கவில்லை. 19 நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு என்பது போதுமானது இல்லை. 252 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும்.

Advertising
Advertising

வீரராஜேந்திரன்: கோ 50 விதை நெல் வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் வழங்க வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நகைகளை வைத்து விவசாயக்கடன் பெறுபவர்களுக்கு கட்டாயமாக உரம் எடுத்துக்கொள்ள கட்டாயப்படுத்துகின்றனர். இதை கைவிட வேண்டும்.  கோவிந்தராஜ்: குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலைக்கு கரும்பு வெட்டி அனுப்பிய விவசாயிகளுக்கு கடந்த 2015ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை கரும்பு பணம் கொடுக்கவில்லை.2017- 18ம் ஆண்டிற்கு கொடுத்த பணம் குறைவாக கொடுக்கப்பட்டுள்ளது. ரவிச்சந்தர்: மேட்டூர் அணை திறந்து 45 நாட்களுக்கு மேலாகியும் கடலுக்கு காவிரி நீர் சென்றது. கடைமடையை செல்லவில்லை. ஆழ்குழாய் மூலம் குறுவை நடவு செய்த நெற்பயிர்கள் கதிர்வரும் பருவத்தில் தண்ணீர் வாய்க்காலில் வராத காரணத்தால் கதிராக வெளியே வராமல் பதராக வந்து கொண்டு இருக்கிறது. எனவே கரைக்காவலர்களை நியமித்து குறுவை நடவுப் பயிரைக் காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.  இந்நிலையில் 12 மணி ஆகியும் ஆர்டிஓ சுரேஷ் அலுவலகத்திற்கு வரவில்லை. இதனால் விரக்தியடைந்த விவசாயிகள் ஆர்டிஓவை கண்டித்து கூட்டத்தை புறக்கணிப்பு செய்தனர். பின்னர் அலுவலகத்தை விட்டு வெளியே வந்த விவசாயிகள் தாங்கள் வைத்திருந்த காய்ந்த நாற்றங்காலை வைத்து அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Related Stories: