தஞ்சை மாவட்டத்தில் 18வது நாளாக தொடரும் விசைப்படகுகள் ஸ்டிரைக்

சேதுபாவாசத்திரம், செப். 12: தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம் பகுதிகளில் சுமார் 301 விசைப்படகுகள் உள்ளன. இவை அனைத்தும் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு புரிந்துணர்வு ஒப்பந்தப்படி திங்கள், புதன், சனி ஆகிய கிழமைகளில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். விசைப்படகுகள் தடைசெய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்துவதாக கூறி கடந்த மாதம் 23ம் தேதி மீன்வளத்துறை அதிகாரிகள் விசைப்படகுகளை ஆய்வு செய்தனர். நிறுத்தி இருக்கும் படகுகளை ஆய்வு செய்வது முறையில்லை. இரண்டு படகுகள் சேர்ந்து இரட்டைமடி என கூறப்படும் இழுவலையை பயன்படுத்த முடியும். ஆகவே கடல் உள்ளே மீன்பிடி தொழில் செய்யும் போது தவறு நடந்தால் நீங்கள் எந்த நடவடிக்கை எடுத்தாலும் கட்டுப்படுகிறோம் என விசைப்படகு மீனவர்கள் தரப்பில் கூறப்பட்டது.

 

அதை ஏற்று அதிகாரிகள் சென்று விட்டனர். ஆனால் வழக்கம்போல் கடந்த மாதம் 25 ம் தேதி சனிக்கிழமை  கடலுக்கு செல்ல தயாராகும்போது.சேதுபாவாசத்திரத்தை சேர்ந்த 5 விசைப்படகுகள் மீது இரட்டைமடி வலை பயன்படுத்தியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக்கூறி அனுமதி டோக்கன் மற்றும் மானிய டீசல் வழங்க மறுத்து விட்டனர். இதனால் ஆத்திரமடைந்த மீனவரகள் ஆதாரமின்றி எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்யும்வரை காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதென முடிவெடுத்து கடந்த மாதம் 25ம் தேதி சனிக்கிழமை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று 18வது நாளாக சேதுபாவாசத்திரம் விசைப்படகு மீனவர்களும், அவர்களுக்கு ஆதரவாக மல்லிப்பட்டிணம், கள்ளிவயல்தோட்டம் மீனவர்கள் 12வது நாளாகவும் ஒட்டு மொத்தமாக 301 விசைப்படகு மீனவர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலை நிறுத்தத்தால் விசைப்படகுகள் அனைத்தும் துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மீன்பிடி தொழிலாளர்கள், மீன்பிடி சார்ந்த தொழில் செய்த தொழிலாளர்கள், ஐஸ் கம்பெனி வைத்து நடத்துபவர்கள் என 10,000 ஆயிரம் பேர் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

Related Stories: