சதுர்த்தி விழா கொண்டாட்டம் பிரளயம் காத்த விநாயகருக்கு தேனாபிஷேகம் நாளை இரவு விடிய விடிய நடைபெறுகிறது

கும்பகோணம், செப்.12: கும்பகோணத்தை அடுத்த திருப்புறம்பியம் சாட்சிநாத சுவாமி கோயிலில் அருள்பாலிக்கும் தேனபிஷேக பெருமான் என்று அழைக்கப்படும்  பிரளயம் காத்த விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு  நாளை  (13ம் தேதி)   இரவு முழுவதும் தேனாபிஷேகம் நடைபெற உள்ளது. சோழவளநாட்டில் நால்வரால் பாடல் பெற்றதும், வரலாற்று புகழுடையதும்,  மதுரை ஆதீனத்துக்கு சொந்தமானதாக திருப்புறம்பியத்தில் உள்ள கரும்படு சொல்லியம்மை உடனாய   சாட்சிநாத சுவாமி கோயில் திகழ்கிறது.  இந்த கோவிலில் பிரளயம் காத்த விநாயகர் தனி சன்னதி கொண்டு  அருள்பாலித்து வருகிறார். இவர் தேனபிஷேக பெருமான் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார். ராகு அந்தர கற்பத்தில் ஏற்பட்ட பிரளயத்தில் திருப்புறம்பியம் திருத்தலத்தை கருணையால் அழியாவண்ணம் காத்தவர் பிரளயம் காத்த விநாயகர். நத்தான்கூடு, கிளிஞ்சல், கடல்நுரை ஆகிய கடல்  பொருட்களை தெய்வமேனியை கொண்டவராக பிரளயம் காத்த  விநாயகர் எழுந்தருளி காட்சியளித்து வருகிறார்.

Advertising
Advertising

வருண பகவானால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த விநாயகருக்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி அன்று மட்டுமே  தேனபிஷேகம் நடைபெறும். மற்ற நாட்களில் அபிஷேகம் கிடையாது.  விநாயகர் சதுர்த்தி திருநாளில் மாலை   தொடங்கும் தேன் அபிஷேகம்  விடிய விடிய தேனால் மட்டுமே நடைபெறும். அபிஷேகம்  செய்யப்படும் தேனானது,  விநாயகர் திருமேனியில் உறிஞ்சப்படுவதும், அபிஷேக வேளையில் விநாயகர் செம்பவள மேனியராய் காட்சி தருவதும் சிறப்பு. இவ்வாறு பல சிறப்புகள் பெற்ற பிரளயம் காத்த விநாயகருக்கு விழாக்குழுவினரால் 34வது ஆண்டாக நாளை  (13ம் தேதி)   விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு  மாலை   5 மணிக்கு மங்கள இசையுடன் விழா தொடங்குகிறது.  14ம் தேதி அதிகாலை 4.30 மணி வரை தேனாபிஷேகம் நடைபெற உள்ளது. பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கும்பகோணத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் திருப்புறம்பியத்திற்கு இயக்கக்கப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

Related Stories: