கும்பகோணம், செப். 12: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகில் சவுந்தரியபுரம் ஆதிகேசவ பெருமாள் கோயில், பையூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில், சுங்குவார் சத்திரம் அருகே ராமானுஜபுரம் மணிகண்டேஸ்வரர் கோயில்களில் கடந்த 2015ம் ஆண்டு சிவன், பார்வதி சிலை, ஆதிகேசவ பெருமாள் சிலை, இரு பூதேவி சிலைகள், இரு ஸ்ரீதேவி சிலைகள், பிரசன்ன வெங்கடேச பெருமாள் சிலை, சக்கரத்தாழ்வார் ஆகிய ரூ.80 கோடி மதிப்பிலான எட்டு ஐம்பொன் சிலைகள் காணாமல் போனது.இந்த சிலைகளை கடந்த 14.5.2015 அன்று சென்னை மேற்கு மாம்பலத்தில் தனலிங்கம் என்பவர் இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்றபோது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் மடக்கி பிடித்தார். பின்னர் சிலைகளை கைப்பற்றி தனலிங்கத்தை கைது செய்தார்.
இந்த வழக்கை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஏற்று விசாரணை நடத்தியதில் 15 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இந்த வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே உள்ள மாரீஸ்வரன், சண்முகம், ஜாய்சன் சாந்தகுமார், தமீம் பாட்ஷா, சபரிநாதன், தனலிங்கம், கோகுல் பிரகாஷ், திரைப்பட இயக்குநர் வி.சேகர், பார்த்தீபன் ஆகியோரும், சிறையில் உள்ள ஜெயக்குமார், விஜயராகவன், முஸ்தபா உள்ளிட்ட 12 பேரும் நேற்று கும்பகோணம் கோர்ட்டில் ஆஜராகினர். இவ்வழக்கில் தொடர்புடைய ராஜசேகர், சண்முகநாதன், சுப்பிரமணியன் ஆகிய மூவரும் நேற்று கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கை விசாரித்த கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அய்யப்பன்பிள்ளை வரும் 25ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்திரவிட்டார்.