டெல்டாவில் நிறைவேற்ற மத்திய அரசு அனுமதி மீண்டும் தலைதூக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டம் தமிழக அரசு நடவடிக்கை என்ன?

திருச்சி, செப்.12: காவிரி வறண்டதாலும், போதிய மழை இல்லாததாலும் கடந்த 6 வருடங்களாக டெல்டாவில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டும் குறுவைக்கு தண்ணீர் திறக்க முடியாத நிலை இருந்தபோதும், அதன் பின் கர்நாடகா, கேரளாவில் ஏற்பட்ட பெருமழை காரணமாக காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால் மேட்டூர் அணை இந்த ஆண்டில் 4 முறை நிரம்பி வழிந்தது. இந்த தண்ணீரை சேமிக்க முடியாமல் உபரி நீர் சுமார் 120 டிஎம்சி அளவுக்கு கடலுக்கு திருப்பி விடப்பட்டது. பெருவெள்ளம் காரணமாக முக்கொம்பு கதவணையும் உடைந்து போனது. இதனால் டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு தண்ணீர் இருந்தும் விவசாயம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இன்னும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

Advertising
Advertising

டெல்டா மாவட்டங்களில் விவசாயத்தை முடக்கும் வகையில் வில்லனாக ஹைட்ரோ கார்பன் திட்டம் வந்துள்ளது. சேட்டிலைட் மூலம் நடத்திய ஆய்வில், இந்தியாவில் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் நிறைந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே இதனை எடுத்து வணிக ரீதியாக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 22 இடங்களில் எடுக்க இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

இதற்காக காவிரி டெல்டாவை 3 ஹைட்ரோ கார்பன் மண்டலங்களாக பிரித்து உள்ளனர். கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடியில் இருந்து நாகை மாவட்டம் தரங்கம்பாடி வரை பொதுத்துறை நிறுவனம் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி பெற்று உள்ளது.

மரக்காணத்திலிருந்து கடலூர் வரை ஒரு பிளாக்கும், பரங்கிப்பேட்டையிலிருந்து வேளாங்கண்ணி வரை ஒரு பிளாக்கும் வேதாந்தா நிறுவனத்துக்கு தரப்பட்டிருக்கிறது. இந்த பிளாக்குகளில் நூற்றுக்கணக்கான கிணறுகளை அமைக்க வேதாந்தா நிறுவனம் முடிவு செய்து உள்ளது. இந்தியாவில் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு ஏலம் விட்டதில் தமிழகத்தில் 2 இடம் உள்ள மொத்தம் 41 இடங்களை வேதாந்தா நிறுவனம் எடுத்து உள்ளது.

ஏற்கனவே புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசலில் ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக மக்கள் நடத்திய தொடர் போராட்டம் காரணமாக கர்நாடகத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் அந்த திட்டத்தை கைவிட்டது. இப்போது மற்றொரு தனியார் நிறுவனம் அதே திட்டத்தை நாகை மாவட்டத்தில் செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இது டெல்டா விவசாயிகளை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.

புதுவை மாநிலம் பாகூரில் இருந்து நாகை, காரைக்கால், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் மட்டும் பூமிக்கு அடியில் ரூ. 20 லட்சம் கோடி மதிப்புள்ள, ஹைட்ரோ கார்பன், எரிவாயு நிரம்பி இருப்பதாக ஆய்வில் தெரியவந்து உள்ளது. இதனை எடுக்க தனியார் நிறுவனம் தயாராகி வருகிறது. இந்த நிறுவனம் விரைவில் மேற்கண்ட பகுதிகளில் முதல் கட்ட ரகசிய ஆய்வை தொடங்க இருக்கிறது. பூமிக்கு அடியில் 10 ஆயிரம் அடி ஆழத்தில் உள்ள ஹைட்ரோ கார்பனை விரிவடைதல் என்ற தத்துவத்தின் அடிப்படையில் மேலே கொண்டு வர முடிவு செய்து உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பூமிக்கு அடியில் உள்ள ஹைட்ரோ கார்பனை மேலே கொண்டு வந்தால் அங்கு ஏற்படும் வெற்றிடத்தில் கடல் நீர் புகும். அல்லது பூமி புதையும் நிலை ஏற்படலாம் என்ற பயம் விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டு உள்ளது.

வேதாந்தா நிறுவனம் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் நிலங்களை கையகப்படுத்த முதல் கட்ட நடவடிக்கை எடுக்க இருக்கிறது. இதற்காக விரைவில் அரசு மூலம் இந்த பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் டெல்டா மாவட்டங்களில் தற்போது விவசாயிகளிடம் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் நிலம் கையகப்படுத்த முடியுமா என்பது அரசுக்கு பெரிய தலைவலியாக உள்ளது. அதே நேரத்தில் மத்திய அரசு உத்தரவிட்டால், தமிழக அரசு அதனை மறுக்குமா என்பது போகப்போக தெரியும். இது குறித்து நேற்றுமுன்தினம் புதுகை வந்த தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறுகையில், ஹைட்ரோ கார்பன் போன்ற எந்த திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்தாலும், மாநில அரசு ஒப்புதல் கொடுத்தால் தான் நிறைவேற்ற முடியும். வேதாந்தா நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளித்துள்ளதாக தமிழக அரசுக்கு எந்த தகவலும் வரவில்லை’ என்றார்.

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன்: தற்போது காவிரிக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கர்நாடகத்தில் புதிய அணை கட்டிவிட்டால் டெல்டாவில் உள்ள நிலங்களை விவசாயிகள் விற்பதை தவிர வேறு வழியில்லை. அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் தான் எண்ணெய் நிறுவனங்களுக்கு நிலம் கிடைக்கும் என்பதால் அதற்கான பணிகளை மத்திய, மாநில அரசுகள் மறைமுகமாக செய்கிறதோ என அச்சப்பட வேண்டிய நிலை உள்ளது. இதனை விவசாயிகள் தடுக்க ஒன்று திரள வேண்டும். தமிழக அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்’ என வலியுறுத்தி உள்ளார். காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச்செயலாளர் தனபாலன்: தற்போது கடலுக்கு உள்ளேயே ஹைட்ரோ கார்பன் எடுக்க திட்டம் நடக்கிறது. ஏற்கனவே கடற்கரையோரங்களை ஆழப்படுத்தி துறைமுகங்கள் அமைக்க கொண்டு வரப்பட்ட சாகர்மாலா திட்டமும் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்காக கொண்டு வரப்பட்டது தான். எனவே ஹைட்ரோ கார்பன் திட்டம் எந்த வடிவத்தில் வந்தாலும் அதனை தடுக்க விவசாயிகள் ஒன்றிணைந்து எதிர்க்காவிட்டால் டெல்டா விவசாயம் பாதிக்கப்படும்.

தற்போது டெல்டா மாவட்டங்களில் சுமார் 20 லட்சம் விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும் விவசாயம் தான் வாழ்வாதாரமாக உள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டால் 20 லட்சம் பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். டெல்டா மாவட்டங்களின் உணவு உற்பத்தி பெரிதும் பாதிக்கப்படும். விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில துணைத்தலைவர் சுகுமாறன்: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் 13 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். அந்த ஆலையை நிரந்தரமாக மூட அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என அனைத்து கட்சிகளும் கூறிய நிலையில் அதை தமிழக அரசு தவிர்த்து விட்டது. தற்போது ஆலையை திறக்க அந்த நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.அதற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி ஆகி விட்டது.  இதை வைத்து பார்க்கும்போது தனியார் நிறுவனத்திற்கு எதிராக இங்கு ஹைட்ரோ கார்பன் எடுக்க தமிழக அரசு எதிர்ப்பு காட்டுமா என்பது சந்தேகம் தான். எனவே . எதிர்காலத்தில் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகி விடும். வேலை வாய்ப்பு தேடி மக்கள் வெளியிடங்களுக்கு செல்லும் அபாயம் வெகு தொலைவில் இல்லை.

Related Stories: