ஆற்காடு அருகே விடாமல் துரத்திய விதி கார் விபத்தில் தப்பியவர் லாரி மோதி பலி

ஆற்காடு, செப். 12: ஆற்காடு அருகே கார் விபத்தில் இருந்து தப்பியவர் லாரி மோதியதில் பரிதாபமாக இறந்தார்.சென்னை மேடவாக்கத்தை சேர்ந்தவர் ஐசக் ராஜேந்திரன்(27). இவர் பெங்களூருவில் உள்ள ஒரு ஐடி கம்பெனியில் வேலை செய்து வந்தார். நேற்று அதிகாலை பெங்களூருவில் இருந்து ெசன்னைக்கு காரில் புறப்பட்டார். காரை அவரே ஓட்டி வந்தார். அதிகாலை 5 மணியளவில் வேலூர் மாவட்டம், ஆற்காடு அடுத்த வேப்பூர் பை-பாஸ் சாலையில் வந்தபோது அங்கு பழுதாகி நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் லாரி மீது கார் மோதியது.இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. ஆனால், காரில் இருந்த ஏர் பலூன் மூலம் ஐசக் ராஜேந்திரன் காயமின்றி உயிர் தப்பினார். இதையடுத்து அவர் காரில் இருந்து வெளியே வந்து காரை பார்வையிட்டார். அப்போது அவ்வழியாக வந்த லாரி, இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த ஐசக் ராஜேந்திரன் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த ஆற்காடு டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். விதியின் விளையாட்டால் கார் விபத்தில் இருந்து தப்பிய ஐசக் ராஜேந்திரன், லாரி விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: