தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமல் தூங்க முடியாமல், படிக்க முடியாமல் மாணவர்கள் அவதி

வேலூர், செப்.12: தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டால் பொதுமக்களும், படிக்க முடியாமல் மாணவர்களும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.தமிழகத்தில் கோடைகாலம் முடிந்தாலும் வெயிலின் தாக்கம் கோடையை மிஞ்சும் அளவுக்கு உள்ளது. இதனால் மின்தேவையும் அதிகரித்துள்ளது. ஆனாலும் மின்உற்பத்தியில் பெரிய அளவுக்கு முன்னேற்றம் இல்லை. புதிய மின்திட்டங்களிலும் திடீரென பழுது ஏற்படுகிறது. மின்தேவையை விட, மின் உற்பத்தி குறைவாக இருப்பதால், சீரான மின்சாரம் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது.இந்நிலையில், தமிழ்நாட்டில் மின்பற்றாக்குறை இல்லை. தேவைக்கு அதிகமாக உள்ளது என அரசு தெரிவித்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பல இடங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை மின்வெட்டு ஏற்படுகிறது. கோடை வெயிலின் தாக்கத்தை போல தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. தொடர்ந்து 100 டிகிரி வெயில் கொளுத்தி வருகிறது.

இந்த நிலையில் மின்தடையால் பொதுமக்கள் வியர்வை, புழுக்கம் மற்றும் கொசுக்கடியால் தூக்கமின்றி மக்கள் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, இரவு 10 மணிக்கு மேல் வீடுகளில் ஏசி பயன்பாடுகள் அதிகமாக உள்ளது. இதனால் கோடை காலத்திற்கு ஏற்ப மின்தேவை அதிகாரித்துள்ளது. இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கிராமப்பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக பகல் நேரங்களில் 6 மணி நேரமாகவும், இரவு நேரங்களில் 6 மணி நேரமாகவும் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.தற்போது படிப்படியாக நகரப்புறங்களில் நேற்று முன்தினம் முதல் மின்வெட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால், குழந்தைகள், வயதானவர்கள் பகல் நேரங்களிலும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் காலாண்டு தேர்வு எழுதும் மாணவர்களும் படிக்க முடியாமலும், வேலைக்கு சென்றுவிட்டு வந்து இரவில் தூங்க முடியாமாலும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்துக்கு மாதந்தோறும் மின்சாரம் பெறப்பட்டு வருகிறது. இதற்கான ஒப்பந்தம் போடப்பட்டு மின்சாரம் பெறப்பட்டு வருகிறது. அந்த ஒப்பந்தம் கடந்த மாதத்துடன் காலக்கெடு முடிந்துவிட்டது. ஆனால் மறுஒப்பந்தம் போடவில்லை. இதற்கிடையில் காற்றாலை மின்சாரம் மிகவும் குறைவாகவே கிடைக்கிறது. உள்ளூர் மின்திட்டங்களை வைத்து மின்சப்ளை செய்ய முடியவில்லை.

தற்போது 7 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. கிடைப்பது அதில் பாதியாக உள்ளது. இதனால் தான் தற்போது கிராமப்புறங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலில் உள்ளது. சில நாட்களாக நகரப்புறங்களிலும் மின்வெட்டு ஏற்பட்டு வருவது உண்மை தான். தேவைக்கு குறைவாக இருப்பதால் மின்சாரத்தை சேமித்து வழங்க முடியாது. இருக்கும் மின்சாரத்தை பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் மின்வெட்டை அமல்படுத்தி வருகிறோம்.

அதேபோல் வெயிலின் தாக்கத்தால் மின்சாரம் தேவை கோடைக்காலத்தை போல செலவாகிறது. மழைபெய்தால் விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் மின்சாரம் குறைவாகும். அதேபோல் வீடுகளில் ஏசி பயன்பாடும் ஓரளவுக்கு குறையும். இந்த நிலைமை இன்னும் சில நாட்கள் நீடிக்கும். இதற்கான நடவடிக்கையை தமிழக அரசு தான் எடுக்க வேண்டும்.

Related Stories: