பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் நூதன ஆர்ப்பாட்டம்

சேலம், செப்.11: சேலத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை காங்கிரஸ் தலைமையில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மறியலில் ஈடுபட்ட 110 ேபரை, போலீசார் கைது செய்தனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, சேலம் தலைமை தபால் நிலையம் அருகே காங்கிரஸ் தலைமையில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சேலம் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை வகித்தார்.  மத்திய மாவட்ட திமுக செயலாளரும், எம்எல்ஏவுமான ராஜேந்திரன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மோகன், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயராமன், முன்னாள் இளைஞர் தலைவர் கார்த்திக், மாநகர், மாவட்ட இளைஞரணி தலைவர் கமலகண்ணன், மாவட்ட துணைத்தலைவர் பிரபு, பழனிசாமி, கோவிந்தன் உட்பட பல்வேறு கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ரிக்‌ஷாவில் ஸ்கூட்டரை கட்டி வந்து, பெட்ரோலுக்காக தட்டு ஏந்தி பிச்சை எடுப்பது ேபால நூதன முறையில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதே போல் கேஸ்விலை உயர்வை கண்டித்து மண்அடுப்பு சமையலுக்கு மாறி விட்டதை ேபான்றும் சித்தரிக்கப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.  ஆர்ப்பாட்டத்தில் சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், எம்எல்ஏவுமான ராஜேந்திரன் கூறுகையில், ‘கடந்த 2014ம் ஆண்டு ஒரு லிட்டர் பெட்ரோல் ₹63 ஆக இருந்தது. அப்போது, கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. ஆனால் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. கடந்த திமுக ஆட்சியில் பெட்ரோல், டீசல் மீதான வரியை 4 சதவீதம் குறைத்தது. தற்போது ஆட்சியில் உள்ள அதிமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றார்.

இதேபோல், சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சிபிஐ(எம்எல்), சிபிஐ(எம்) உள்ளிட்ட பல்வேறு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் மோகன், மோகனசுந்தரம், நடராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ (எம்எல்) மாநில  செயற்குழு உறுப்பினர் செல்வசிங் கூறுகையில், ‘மத்திய அரசின் தவறான பொருளாதார  கொள்கையால் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல்  விலை நிர்ணயத்தை மத்திய அரசே செய்ய வேண்டும்,’ என்றார்.இந்த ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட 110 பேரை போலீசார் கைது செய்து சூசன் மஹாலில் அடைத்தனர்.   பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Related Stories: