கருணாநிதி மறைவால் மனமுடைந்து தற்கொலை செய்த பெண் குடும்பத்திற்கு ₹2 லட்சம் நிதி

சேலம், செப்.11: திமுக தலைவர் கருணாநிதி மறைவால், சேலத்தில் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் குடும்பத்திற்கு, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா, ₹2 லட்சம் நிதியுதவி வழங்கினார். சேலம் அமானி கொண்டலாம்பட்டி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி ராஜேஸ்வரி என்கிற ராஜாத்தி (51). தீவிர திமுக தொண்டரான இவர், கடந்த மாதம் 7ம் தேதி, தலைவர் கருணாநிதி உயிரிழந்ததில் இருந்து கடும் மனஉளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில், ஆகஸ்ட் 10ம் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது, மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு ₹2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று, சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா, ராஜேஸ்வரியின் வீட்டுக்கு சென்றார். அங்கு ராஜேஸ்வரியின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், மனோகரன் மற்றும் அவரது மகள்கள் சித்ரா, கனிமொழி, மகன் மாதேஸ்வரன், மனோகரனின் தாய் அம்மணியம்மாள் ஆகியோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து, தலைமை கழகம் அறிவித்தபடி, ₹2 லட்சத்திற்கான காசோலையை மனோகரனின் குடும்பத்தினரிடம், வீரபாண்டி ராஜா வழங்கினார். அப்போது, முன்னாள் துணை மேயர் பன்னீர்செல்வம், பனமரத்துப்பட்டி ஒன்றிய செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார், பாரப்பட்டி குமார், ஊராட்சி செயலர் சரவணன், இளைஞரணி அமைப்பாளர் சந்திரமோகன், துணை அமைப்பாளர் சங்கர், மாணவரணி கார்த்தி மற்றும் நிர்வாகிகள் அருள், ராஜா, சேகர், கருணாநிதி, நாகராஜ், சவுந்தர், மோகன், தமிழ், பைபாஸ் மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.

Advertising
Advertising

Related Stories: