38 வயது நபருடன் 16 வயது மகளுக்கு திருமண ஏற்பாடுகள்

சேலம், செப்.11:சேலம் அருகே 38 வயது நபருடன், தனது 16 வயது மகளுக்கு திருமணம் செய்ய நடந்து வரும் ஏற்பாடுகளை தடுத்து நிறுத்தக்கோரி, கலெக்டர் அலுவலகத்தில் தந்தை மனு அளித்துள்ளார். சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியை அடுத்த பாப்பம்பாடியைச் சேர்ந்தவர் ராஜா(40). தறித்தொழிலாளியான இவரது மனைவி இந்திரா(35). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். குடும்ப தகராறு காரணமாக, கணவனை பிரிந்த இந்திரா தனது 16 வயது மகளுடன், மாட்டையாம்பட்டியில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருகிறார். இதனிடையே, நேற்று கலெக்டர் அலுவலகம் வந்த ராஜா, கண்ணீர் மல்க மனு ஒன்றை அளித்தார்.

 இது குறித்து ராஜா கூறுகையில், ‘கடந்த ஆண்டு 10ம் வகுப்பு முடித்த எனது மகளை, மேற்கொண்டு பள்ளிக்கு அனுப்பவில்லை. இதனிடையே சென்னையைச் சேர்ந்த 38 வயது நபருடன், எனது 16 வயது மகளுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இருதினங்களுக்கு முன்பு, நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. பள்ளிப்பருவத்தை முடிக்காத மகளுக்கு, திருமணம் செய்து வைப்பதே அபத்தமானது. அதிலும், 38 வயது நபருக்கு மணமுடித்து, மகளை பலிகடாவாக்க பார்க்கின்றனர். இதற்கு முழுக்க காரணம், அப்பகுதியில் உள்ள ஒரு பெண் புரோக்கர் என கூறப்படுகிறது. எனவே, திருமணத்தை தடுத்து நிறுத்துவதுடன், திருமண ஏற்பாடு செய்த எனது மனைவி, பெண் புரோக்கர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றார். இது குறித்து உரிய விசாரணை நடத்த, வருவாய்த் துறையினருக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.  
Advertising
Advertising

Related Stories: