பொய் புகார் அளித்த தம்பதி மீது வழக்கு

தொட்டியம், செப்.11: தொட்டியம் அருகே சாலையோரம் நின்றிருந்த பெண்ணிடம் செயினை பறித்த வழக்கில் திருடுபோனது கவரிங் செயின் என்பது தெரிந்தது. இதையடுத்து பொய்யான புகார் அளித்ததாக தம்பதி மீது வழக்குப்பதிந்து கணவனை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் அடுத்த மோகனூரைச் சேர்ந்தவர் நவலடி(60).  மோகனூர் சர்க்கரை ஆலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.  இவரது மனைவி வசந்தா(45).  இருவரும் இரு தினங்களுக்கு முன் முசிறியில் உள்ள உறவினர் வீட்டுக்கு மொபட்டில் வந்து விட்டு மீண்டும் திருச்சி-நாமக்கல் சாலையில் மோகனூருக்கு சென்று கொண்டிருந்தனர்.  தொட்டியம் அருகே உள்ள மணமேடு கிராமத்தின் முன் நவலடி மொபட்டை நிறுத்தி விட்டு சிறுநீர் கழிக்க சென்றுள்ளார்.  சாலையோரத்தில் மொபட் அருகே வசந்தா நின்றுள்ளார். அப்போது அந்த வழியாக பைக்கில் இரண்டுபேர் வந்தனர். அவர்களின் ஒருவன் தனியாக நின்ற வசந்தாவின் கழுத்தில் கிடந்த செயினை பறித்துக் கொண்டு தப்பியோடினார். வசந்தா சத்தமிட்டதால் அருகில் இருந்தவர்கள் வாலிபரை சுற்றி வளைத்து பிடித்தனர். மற்றொரு வாலிபர் பைக்கில் தப்பிச் சென்றார்.  இதுகுறித்து வசந்தா தொட்டியம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் மர்ம நபர் 9 பவுன் செயினை பறித்ததாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் பிடிபட்ட வாலிபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வாலிபர் நாமக்கல் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பதும், குடிபோதையில் வசந்தாவிடம் செயினை பறித்ததும் தெரியவந்தது. ஆனால் காவல்நிலையத்தில் அளித்த புகாரில் நவலடியும், அவரது மனைவி வசந்தாவும் கூறியதுபோல் வாலிபர் பறித்தது தங்கசங்கிலி இல்லை, அது கவரிங் செயின் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பொய்யான புகார் கொடுத்த தம்பதிகள் நவலடி, வசந்தா ஆகியோர் மீது வழக்கு பதிந்தனர். இதில் நவலடி கைது செய்யப்பட்டார். இதேபோல் செயினை பறித்த வாலிபர் ரமேசையும் போலீசார் கைது செய்தனர்.
Advertising
Advertising

Related Stories: