முழு அடைப்பு போராட்டத்தால் மாநகரில் ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு

திருப்பூர், செப். 11: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று நடந்த முழு அடைப்பு போராட்டத்தால் திருப்பூர் மாவட்டத்தில் 75 சதவீத கடைகள் அடைக்கப்பட்டன. திருப்பூரில் மட்டும் ரூ.100 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது.   பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. திருப்பூரில் இதற்கு ஆதரவு தெரிவித்து மளிகை வியாபாரிகள், அரிசி வியாபாரிகள் சங்கம், தினசரி மார்க்கெட் வியாபாரிகள், செகன்ட்ஸ் பனியன் வியாபாரிகள் சங்கம், நகை கடை உரிமையாளர்கள் சங்கம், ஓட்டல் உரிமையாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், கடைகள் அனைத்தும் முழுமையாக அடைக்கப்பட்டன.

Advertising
Advertising

 மேலும், கடையடைப்பு போராட்டத்திற்கு பனியன் தொழிற்சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்திருந்ததால், திருப்பூரில் 60 சதவீதத்திற்கும் மேல் பனியன் நிறுவனங்கள் மற்றும் அதை சார்ந்த நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன.

காதர்பேட்டை பகுதியில் பனியன் விற்பனையகங்கள், கோர்ட் ரோடு, ராஜாராவ் வீதி, கெஜலட்சுமி தியேட்டர் ரோடு ஆகியவற்றில் உள்ள சாயப்பொருள் விற்பனையகங்கள் மூடப்பட்டிருந்தன. மார்க்கெட்டுகளும் முழுமையாக செயல்படவில்லை. வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டன.  புதுமார்க்கெட் வீதி, பழைய மார்க்கெட் வீதி, குமரன் சாலை, காதர்பேட்டை, மாநகராட்சி வீதி என அனைத்துப் பகுதிகளிலும் ஜவுளி, மளிகை, டிபார்ட்மெண்ட் ஸ்டோர்கள், ஹார்டுவேர் கடைகள் மூடப்பட்டன.   கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்தப் போராட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டது.

தனியார் பஸ்கள் மற்றும் லாரி, ஆட்டோக்கள் ஓடவில்லை. அரசு பஸ்கள் வழக்கம் போல் இயங்கின. ஆனால், பயணிகள் கூட்டம் இல்லாததால், பெரும்பாலான பஸ்கள் காலியாகவே ஓடியது. போராட்டத்தையொட்டி, மாநகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டன.  இதுகுறித்து தொழிற்சங்கத்தினர் கூறுகையில்,`இப்போராட்டம் முழு அளவில் வெற்றிகரமாக நடந்தது. 1500க்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் அடைக்கப்பட்டன.

இப்போராட்டத்தால் திருப்பூரில் மட்டும் சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டது’ என்றனர்.  காங்கயம், பொங்கலூர், தாராபுரம், உடுமலை, பல்லடம், அனுப்பர்பாளையம் ஆகிய பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. மருந்து கடைகள், பால் விற்பனை நிலையங்கள் செயல்பட்டன. லாரிகள், ஆட்டோக்கள் ஓடவில்லை.

Related Stories: