குடிநீர் வீணாவதை கண்டித்து தண்ணீரில் இறங்கி போராட்டம்

அவிநாசி, செப். 11: திருப்பூரில் குழாய் உடைந்து பல நாட்களாக குடிநீர் வீணாகி வருவதை கண்டித்து, நேற்று சாலையில் குளியல் போராட்டம் நடத்திய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.திருப்பூர் அம்மாபாளையம் பகுதியில் இரண்டாவது குடிநீர் திட்டத்தின் பிரதான குழாய் உடைந்து 20 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வீணாக சாலையில் ஓடிக் கொண்டுள்ளது. இதுகுறித்து பலமுறை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், அதேபகுதியை சேர்ந்த தேவபாலன் (32) என்ற வாலிபர் குடிநீர் வீணாவதை கண்டித்து, தண்ணீர் தேங்கி நின்ற குழியில் அரை நிர்வாண கோலத்தில் இறங்கி மூன்று மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீரில் மூழ்கியபடி போராட்டம் நடத்தினார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த 15வேலம்பாளையம் போலீசார், அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து, தேவபாலன் போராட்டத்தை முடித்துக் கொண்டார்.

Related Stories: